Last Updated : 07 Aug, 2018 03:11 PM

 

Published : 07 Aug 2018 03:11 PM
Last Updated : 07 Aug 2018 03:11 PM

தமிழன் அறிவியல் முன்னோடியா?

நண்பர் அனுப்பிய வாட்ஸ்அப் தகவலைப் படித்ததும் வியந்து போனேன். நண்பர் பலருக்கும் தெரிந்த ஒரு குறளைத்தான் அனுப்பியிருந்தார். ‘அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்’. தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக் கரத்தால் அளாவப்பட்ட கூழ் அமிர்தத்தைவிட இனிதானதாக மாறிவிடுகிறது. இது பொருள். எனது வியப்புக்குக் காரணம் குறளோ அதன் பொருளோ அல்ல. இயற்பியல் விரிவுரையாளரான நண்பர் குறளுக்கு அளித்திருந்த விளக்கம்.

சிறுகை என்பதை நானோ தொழில்நுட்பம் என்று எடுத்துக் கொள்ளலாம் என்கிறார் நண்பர். எழுபதுகளின் மத்தியில்தான் நானோ தொழில்நுட்பம் அறிமுகமானது.. ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு மில்லி மீட்டர். ஒரு மில்லி மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு மைக்ரோ மீட்டர். ஒரு மைக்ரோ மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பங்கு நானோ மீட்டர். மரபணுக்களின், தனிமங்களின் தோற்றத்தை நானோ அளவுகளில் ஆராய்ந்து, அவற்றின் வேற்றுமைகளைக் கண்டுணர்ந்து அவற்றை மாற்றி அமைக்க முடியுமா என்று அறிவியலாளர்கள் ஆய்வுசெய்கிறார்கள். இந்த நானோ தொழில்நுட்பத்தைத்தான் குறளோடு கொண்டுவந்து பொருத்துகிறார் நண்பர்.

மந்தார மலையைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து எடுக்கப்பட்டது அமிர்தம் என்றும், இந்த அமிர்தம் அழியாத அமரத்துவம் தரவல்லது என்றும் நாம் கேட்டிருக்கிறோம். வருங்காலத்தில் நானோ தொழில்நுட்பத்தால் டி.என்.ஏ-வின் குறைபாடுகளை நீக்க முடியுமென்றும் அதன் வாயிலாக முதுமை தடுக்கப்படும் சாத்தியம் உள்ளது என்றும் இறவா நிலையை எட்ட முடியும் என்றும் கூறுகிறார் நண்பர். ஆகவே, வருங்காலத்தில் அறிவியலாளர்கள் நானோ தொழில்நுட்பம் என்கிற சிறுகை மூலம் சாவா மருந்தாகிய அமிர்தத்தை மக்களுக்கு வழங்குவர் என்று போகிறது நண்பரின் பொழிப்புரை.

தேர்வு எழுதியதும் மறந்துவிடுங்கள்

இந்த விளக்கவுரை தந்த வியப்பிலிருந்து விடுபட்டதும் பத்தாம் வகுப்பில் எங்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டிருந்த ஒரு கட்டுரை என் நினைவுக்கு வந்தது. ‘தமிழன் அறிவியல் முன்னோடி’ என்பது கட்டுரையின் தலைப்பு.. பழந்தமிழ்ப் பாடல்கள் சிலவற்றை எடுத்துக்காட்டி, அதில் பொதிந்துள்ள அறிவியல் கருத்துகளை விளக்கியிருந்தார் கட்டுரையாசிரியர்.

ஒளவையார்தான் முதலில் வந்தார். ‘ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர் நாழி முகவாது நால்நாழி’ என்று தொடங்கும் மூதுரைப் பாடல். கடல் நீரை எவ்வளவு அழுத்தி முகர்ந்தாலும் ஒரு படியானது (நாழி) நான்கு படி (நால்நாழி) நீரை மொள்ளாது என்பது பொருள். இந்தப் பாடலிலிருந்து திரவத்தை அழுத்த முடியாது என்று பின்னாளில் கண்டறியப்பட்ட இயற்பியல் தத்துவம் ஒளவையாருக்குத் தெரிந்திருந்தது என்பது கட்டுரையாசிரியரின் வாதம்.

17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சுக் கணித மேதையும் இயற்பியல் அறிஞருமான பிளாசி பாஸ்கல் திரவங்களை அழுத்த முடியாது என்பதிலிருந்து தனது புகழ்பெற்ற பாஸ்கல் விதியை உருவாக்கினார். ‘அசைவற்று இருக்கும் ஒரு நீர்மத்தில் ஒரு புள்ளியில் கொடுக்கப்படும் அழுத்தம், அதன் ஏனைய புள்ளிகளுக்கும் சமமாகப் பரவும்’ என்பது பலருக்கும் பள்ளிப் பாடம். பாஸ்கல் விதி நீரியல் துறையில் பல கருவிகளின் கண்டுபிடிப்புக்கு வழிகோலியது.

எங்கள் தமிழாசிரியர் நாகலிங்க ஐயா சொன்னார்: “இந்த அறிவியல் - முன்னோடிப் பாடத்தை நன்றாகப் படித்துக்கொள்ளுங்கள். இது தமிழ்ப் பண்டிதர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஆகவே, தேர்வில் நிச்சயம் கேள்விகள் வரும். தேர்வு எழுதியதும் மறந்துவிடுங்கள். தமிழ்ப் பண்டிதர்களை விட்டுவிடுங்கள். அவர்களுக்கு அறிவியல் தெரியாது”. ஆனால் இப்போது தமிழ்ப் பண்டிதர்கள் மட்டுமில்லை, என்னுடைய நண்பரைப் போன்ற அறிவியலாளர்களும் இந்த ‘அறிவியல் - முன்னோடி’ என்கிற கருத்தை உயர்த்திப்பிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அறிவியலும் கலையும் வேறுவேறு

அறிவியல் உண்மைகளையோ கணிப்புகளையோ கண்டடைவதற்கு ஒழுங்கமைவுடன் கூடிய வழிமுறைகள் பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். கருதுகோள்கள் நிரூபிக்கப்பட்டிருக்க வேண்டும். தர்க்கரீதியான விவாதங்களும் விளக்கங்களும் முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது அது அறிவியலாகும்.

நாகலிங்க ஐயாவுக்கு இந்தத் தெளிவு இருந்தது. இதே தெளிவு தமிழில் ஒரு இலக்கியவாதிக்கும் இருந்தது. புதுமைப்பித்தன். அறிவியலுக்கும் இலக்கியத்துக்குமான வேறுபாட்டை 1934-லேயே குறிப்பிட்டுச் சொல்லுகிறார் புதுமைப்பித்தன். “ஸயன்ஸ் அறிவை விசாலப்படுத்துகிறது….. கலையில் உணர்ச்சி விசாலப்படுத்துகிறது…. ஸயன்ஸ் இல்லாவிட்டால் அசட்டுத்தனம் மலியும். இலக்கியம் இல்லாவிட்டால் நாம் உணர்ச்சியற்ற யந்திரங்களாகி விடுவோம்” என்கிறார் புதுமைப்பித்தன்.

தொடர்ந்து அறிவியலுக்குத் தர்க்க சாஸ்திர படிக்கட்டு வேண்டும் என்றும் சொல்கிறார். விஞ்ஞானிக்கும் இலக்கிய கர்த்தாவுக்கும்  உள்ள வேறுபாட்டையும் கோடிட்டுக் காட்டுகிறார். “ஒருவன் அறிவைக் கொண்டு துருவித்துருவி, பிரித்துப் பார்த்து உலகத்தைக் கவனிக்கிறான். இன்னொருவன் சிருஷ்டியின் உண்மைகளை அப்படியே கனவாகப் பார்த்துக் களிக்கிறான்”.

வள்ளுவரும் ஒளவையாரும் இன்ன பிற தமிழ்ப் புலவர்களும் கனவு கண்டு களித்ததன் பலனாக, அவர்கள் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கியிருக்கும் கொடை மிகப் பெரிது.. அதற்காக நாம் பெருமைப்படலாம். ஆனால், இல்லாத அறிவியல் பெருமைகளை அவர்கள் தலை மீது ஏற்றி வைப்பது அவர்களுக்கோ நமக்கோ பெருமை தராது.. தமிழர்கள் அறிவியல் துறையில் சாதிக்க வேண்டும். அப்படிச் சாதித்தால் நாம் பெருமைப்படலாம். அதுவரை மறைவாக நமக்குள்ளே பழம்பெருமை பேசுவதை நிறுத்த வேண்டும்.

- மு.இராமனாதன், ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x