

1992 ஜனவரி 22 முதல் 1998 ஜனவரி 18 வரையிலான காலப் பகுதியில் ‘முரசொலி’ வளாகத்தில் ஆசிரியர் குழுவில் பணியாற்றியிருக்கிறேன். முதலில், எட்டு மாதங்கள் மட்டுமே வந்து நின்றுபோன ‘தமிழன்’ நாளிதழில். பிறகு, ‘குங்குமம்’ வார இதழில். இடையில் சில காலம் ‘முரசொலி’யின் வார இணைப்பில். இந்த ஆறாண்டு பணிக் காலத்தில் கருணாநிதியைப் பல முறை சந்தித்திருக்கிறேன். பாராட்டுகளைப் பெற்றிருக்கிறேன் - சமமாகத் திட்டுகளையும் வாங்கியிருக்கிறேன். இரண்டிலும் பாடங்கள் இருந்தன. ஒரு பத்திரிகையாளராக அவருடைய இதழியல் செயல்பாடுகளிலிருந்து மூன்று அம்சங்களை முக்கியமானவையாகக் கருதுகிறேன்.
ஒன்று: ஓர் இதழாளனுக்குத் தேவையான எல்லாவற்றையும் பற்றிய பொது அறிவு. பத்திரிகையில் இடம்பெறும் சின்னச் சின்னச் செய்திகளும் கவனத்துக்குரியவை. அவையும் முக்கியமானவையே என்ற பார்வை. ‘தமிழன்’ நாளிதழில் வார ராசி பலன்கள் பகுதி உண்டு. ஜோதிடரிடமிருந்து அந்த வார பலன் வரவில்லை. பக்கம் அச்சுக் குப் போக வேண்டும். எனவே, முந்தைய வார ராசிபலன் பகுதியில் மேஷ ராசிக்கான பலனை விருச்சிக ராசிக்கும் துலாம் ராசிக்கானதைக் கும்ப ராசிக்குமாக மாற்றி பக்கத்தை அனுப்பிவிட்டோம். மறுநாள் கருணாநிதி அழைத்தார். ‘ஏன்யா, விருச்சிக ராசிக்கான பலன்ல சித்திரை நட்சத்திரம் எப்படி வரும்? அது துலாம் ராசியிலதான வரும்? என்னா ஜோசியமோ!’ என்று கடிந்துகொண்டார். பத்திரிகையின் ஒவ்வொரு எழுத்தையும் அவர் வாசிக்கிறார் என்பது மட்டும் அல்ல; தனக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லாத ஜோதிடத்தையும் கூட விட்டுவைக்கவில்லை என்பது புரிந்தது.
இரண்டு: ஒரு பத்திரிகையாளராக வாசகர்களை மதித்தவர் கருணாநிதி. தனது கருத்துகள் வாசகர்களிடம் சரியாகச் சென்று சேர வேண்டும் என்று அக்கறை கொண்டவர். அதேசமயம், வாசகனுக்குப் புரிய வேண்டும் என்பதற்காகத் தன்னுடையது என்று உருவாக்கி வைத்திருக்கும் நிலையிலிருந்து கீழிறங்கிச் செல்ல விரும்பாதவர். ‘முரசொலி’ யில் அவர் எழுதும் கடிதங்களும் கேள்வி-பதில்களும் அதற்கு உதாரணங்கள். சாமானியத் தொண்டர்களைப் பெரும்பான்மை வாசகர்களாகக் கொண்ட பத்திரிகை அது என்றாலும், சிக்கலான விஷயங்களை அணுக அவர் தயங்குவது இல்லை. வாசகரிடம் கீழிறங்கிச் செல்வது அல்ல; வாசகரை மேலே உயர்த்துவதுதான் பத்திரிகையாளரின் வேலை என்று நம்பியவர்.
மூன்று: பிழை பொறுக்க மாட்டார். எவ்வளவு கவனமாகப் பார்த்துக்கொண்டாலும் பத்திரிகைகளில் அச்சுப் பிழை குடியேறுவதைத் தவிர்க்க முடியாது. ஆனால், கருணாநிதி பிழை பொறுக்க மாட்டார். அந்த வகையில் அவர் ஒரு முழுமைவாதி. அவரது ஆக்கங்கள் கைப்பட எழுதப்படுபவை. அதில் அடித்தல் திருத்தல்களைக் காண முடியாது. காரணம், பிழையோ அடித்தலோ வந்தால், எழுதிய பிரதியை அப்படியே வீசிவிட்டு மீண்டும் எழுதுவார். அவ்வளவு கச்சிதம் ஆசிரியர் குழுவில் பலருக்குக் கிடையாது என்பதால், அன்றாடம் யாருக்கேனும் மண்டகப்படி நடக்கும்.
பத்திரிகையாளர் சந்திப்புகளில் சில சமயம் காரியார்த்தமாகவும் சில சமயம் தோழமையாகவும் அவர் சொல்வார்: ‘நானும் பத்திரிகைக்காரன்!’ அது மிகையோ தற்புகழ்ச்சியோ அல்ல, தொட்டு உணர்ந்த உண்மை!
சுகுமாரன்
கவிஞர்,
மூத்த பத்திரிகையாளர்,
பொறுப்பாசிரியர், ‘காலச்சுவடு’