Published : 14 Aug 2018 09:03 am

Updated : 14 Aug 2018 09:57 am

 

Published : 14 Aug 2018 09:03 AM
Last Updated : 14 Aug 2018 09:57 AM

கடலில் கலக்கும் காவிரி: உயிர்பெறுமா சோழகங்கம்?

கடந்த இரண்டு வாரங்களில் வீராணம் ஏரிக்குப் பாய்ந்த நீரின் அளவு போக, ஏறக்குறைய 14 டிஎம்சி காவிரி நீர், கடலில் கலந்துள்ளது. இதனைக் குறைக்கக்கூடிய வகையில் கங்கை கொண்ட சோழபுரத்தின் ‘சோழகங்கம்’ ஏரியைத் தூர்வாரி அதற்கான நீர் ஆதாரமாக இருந்த கால்வாயையும் மீட்டுருவாக்கம் செய்யலாம். அதற்காக செங்கரையூர் - பூண்டி பாலத்தை ஒட்டி தடுப்பணையையும் கட்டலாம். இதனால் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வேளாண்மை நிலங்களாக மாற்றலாம்.

தமிழினம் உலகுக்கு வழங்கிய அறிவுக் கொடைகளுள் தலையாயது வேளாண்மையும் நீர் மேலாண்மையும். பெரிய ஆறுகள் தமிழகத்தில் இல்லாததால் வான்மழையை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது என்பதில் பண்டைகாலத் தமிழர்கள் பெரிதும் கவனம் செலுத்தினர். அதனால் பாசனத்தைப் பெருக்கும் வகையில் ஏரி, குளங்களை வெட்டினர். ஒவ்வொரு ஏரியின் உபரிநீர் மற்ற ஏரிகளுக்கு நீர் ஆதாரமானது. அதனால் பெய்யும் மழைநீர் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.


ஏரி நீரை ஒழுங்குபடுத்தி அதன் பாசனப் பரப்பின் அளவு, நீரின் தேவை, ஏரியில் உள்ள நீரின் அளவு இவற்றையெல்லாம் நன்கு அளந்து அறிந்து, நீர்ப் பகிர்மானத்தை முறைப்படுத்துபவர்கள் ‘நீர்க்கட்டிகள்’ என அழைக்கப்பட்டனர். ஏரி நீரும் வாய்க்கால்களும் ஏரி வாரியத்தால் கண்காணிக்கப்பட்டன. ஏரி வாரியம் ஊரவையின் ஆளுகைக்கு உட்பட்டதாகும். கரைகளில் மரங்கள் வளர்க்கப்பட்டன. ஏரியில் மீன்கள் வளர்க்கப்பட்டன. இவற்றிலிருந்து வரும் ஏலத்தொகை ஏரி பராமரிப்புக்கான வருவாய் ஆயிற்று.

இவ்வாறு அமைக்கப்பட்ட ஓர் ஏரிதான் இன்றைக்கு சென்னைக்கான குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான வீராணம். கொள்ளிடத்தின் உபரி நீர் வீராணத்தை நிரப்புகிறது. ஒரு காலத்தில் வீராணம் ஏரியே வேறொரு பெரிய ஏரியின் வடிகாலாக இருந்துள்ளதை வரலாறு கூறுகிறது. அது ‘சோழகங்கம்’. உலக வரலாற்றில் மாபெரும் கடற்படைக்குச் சொந்தக்காரனும், கிழக்காசிய நாடுகள் பலவற்றை வெற்றி கண்டவனும், இந்தியா முழுமையையும் தன்னாட்சியில் இணைத்தவனுமாகிய இராசேந்திர சோழன் வெட்டியது ‘சோழகங்கம்’ ஏரி.

பொன்னேரியின் தொழில்நுட்பம்

‘கங்கை கொண்ட சோழன்’ எனும் விருதுக்கு உரியவனாகிய இராசேந்திரன், கங்கையிலிருந்து பொற்குடங்களில் கொண்டுவரப்பட்ட நீரை தான் வெட்டிய பெரிய ஏரியில் கலந்து அதனை ‘சோழகங்கம்’ என்றாக்கினான். இன்று நீரின்றி பரப்புகள் சுருங்கி வறட்சியாகக் காணப்படும் சோழகங்கம் தன் பெயரைக்கூட இழந்து பொன்னேரி என்று அழைக்கப்பட்டுவருகிறது.

16 மைல் நீளமும் 3 மைல் அகலமும் கொண்டதாக இந்த ஏரி வெட்டப்பட்டது. நீரை வெளியேற்ற கலிங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ஏரிக்கான நீரை எங்கிருந்து பெற்றனர்? இந்தக் கேள்விக்கான விடையில் தொல் தமிழரின் நீர் மேலாண்மை எந்த அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பம் நிறைந்தது என்ற உண்மை நம்மை வியக்க வைக்கிறது. கொள்ளிடத்திலிருந்து அறுபது கல் தொலைவுக்குக் கால்வாய் வெட்டி, சோழகங்கத்துக்கு நீர்வழித் தடத்தை உருவாக்கியுள்ளனர். கல்லணைக்கு ஏறத்தாழ 5 கல் கிழக்கே அன்பில் - செங்கரையூர் சாலையில் - கொள்ளிடத்தின் வடகரையில் அரியூரை அடுத்து அந்த நீர்வழித் தடத்தின் தலைவாய் அமைந்திருந்தது. அங்கு அமைக்கப்பட்ட மதகின் எச்சம் இன்றும்கூட கொள்ளிடத்தின் வடகரையை ஒட்டிச் சிதைந்து தன் பழைய வரலாற்றைப் பேசுவார் அற்று வெறுமையாய் புதர்மண்டி நின்றுகொண்டிருக்கிறது.

ஏரிக்கு வரும் நீரின் வேகம், அதனை எதிர்கொள்ளும் ஏரியின் தன்மை - ஏரியில் நிரம்பிய நீர் வெளியேறும் அளவு ஆகிய அனைத்தும் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் அந்த வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அமையும் உத்தியை நீரியல் சரிவு அல்லது சாய்மானம் என்பர். அது 1 / 4000 என்ற அளவில் இருக்க வேண்டும். இந்த அளவில் கூடினால் நீரின் வேகம் அதிகமாகி வாய்க்காலில் அரிப்பு ஏற்பட்டுவிடும். குறைந்தால் ஏரிக்கு நீர் செல்லாது. இவ்வளவு அறிவியல் நுட்பத்தோடு அமைக்கப்பட்டதுதான் அன்பில் - செங்கரையூர் இடையில் கொள்ளிடத்திலிருந்து வெட்டப்பட்ட 60 கல் நீளமுள்ள கால்வாய் ஆகும். அதாவது சற்று உயர்வான இடத்திலிருந்து பள்ளமான பகுதியை நோக்கி வெட்டப்பட்ட கால்வாய் அதுவாகும்.

தடுப்பணை சாத்தியமே

இவ்வளவு தூரம் மதகைத் திறப்பதன் வழியாக நீரைக் கொண்டுசென்றிருக்க முடியாது. ஆற்றில் நீர் ஓரளவு தேங்கினால்தான் மதகைத் திறந்ததும் நீர் பாய்ந்தோட ஏதுவாகும். அதனால் அங்கு தடுப்பணை ஒன்று கட்டாயம் இருந்திருக்க வேண்டும். சமவெளியில் அணை கட்டும் தொழில்நுட்பத்தை அறிந்திருந்த முன்னோடிகள் தமிழர்கள். தொடர்ந்து மணல் அள்ளுவதாலும் புதிய புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்காக நீரைப் பெருமளவு உறிஞ்சுவதாலும் காவிரிப் படுகையில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆற்றுப் படுகையில் உள்ள மரங்களே பட்டுப்போகும் அளவுக்கு நிலத்தடி நீர் சரிந்துவிட்டது.

இச்சூழலில் நிலத்தடி நீரை அதிகப்படுத்த வேண்டிய தேவை நமக்குள்ளது. கர்நாடக அரசு காவிரிப் படுகையின் நிலத்தடி நீரையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, நமக்கு வர வேண்டிய 192 டிஎம்சி நீரை 177 டிஎம்சியாகக் குறைத்துவிட்ட நிலையில், நாம் நிலத்தடி நீரையும் பெருக்கியாக வேண்டும்.

காவிரியின் கிளையாறுகள் அனைத்தும் சமவெளியில் அமைந்தவைதான். நீரைப் பகிர்மானம் செய்யும் அந்த அணைகள் பல மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் செயல்பாட்டில் இருப்பவை. எனவே, சமவெளியில் தடுப்பணை கட்ட அஞ்ச வேண்டியதில்லை. கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டினால் பழைய வரலாற்றையும் மீட்கலாம். நிலத்தடி நீரையும் பெருக்கலாம்.

- க.நெடுஞ்செழியன்,

ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x