

கூட்டுறவின் மூலம், ஒரு சமூகம் எப்படி மேம்படும் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் காணக்கிடைக்கின்றன. அந்த வகையில், ஐக்கிய நாடுகள் அவை 2025ஆம் ஆண்டை ‘பன்னாட்டுக் கூட்டுறவு ஆண்டாக’ அறிவித்துள்ளது. கூடவே, நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், ‘கூட்டுறவு மூலம் ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குதல்’ என்ற வாசகத்தையும் இதன் மையப்பொருளாக அறிவித்துள்ளது.
தேவையும் தோற்றமும்: கூட்டுறவு இயக்கமானது உலக அளவில் 19ஆம் நூற்றாண்டின் இடையே தோன்றி வளர்ச்சி பெற்றுவந்த நிலையில், இந்தியாவில் அதற்கான விதை அந்நூற்றாண்டின் இறுதியில் ஊன்றப்பட்டது. தமிழ்நாட்டில்தான் அதன் வரலாறு தொடங்கியது. மிராசுதாரர்களையும் வட்டிக்குக் கடன் கொடுப்போரையும் விவசாயிகள் சார்ந்திருந்தனர். தொடர்ந்து ஏற்பட்ட பஞ்சங்கள், விவசாயிகளைக் கடனாளி ஆக்கின. கடன் வழங்குவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்ட அமைப்புகள் எதுவும் அப்போது இல்லை. 1875இல் ஏற்பட்ட தக்காணக் கலகத்துக்கு, விவசாயிகளின் கடன் பிரச்சினையும் ஒரு முக்கியக் காரணம்.