

இந்த ஆண்டு முதல் 11ஆம் வகுப்புக்கான (பிளஸ் 1) பொதுத் தேர்வுகள் ரத்துசெய்யப்பட்ட உத்தரவு வெளியானபோது, மாணவர்களைவிட ஆசிரியர்கள் அதை அதிகம் கொண்டாடியதைப் பார்க்க முடிந்தது. 10, 11, 12ஆம் வகுப்புகளில் தொடர்ந்து மூன்றாண்டுகள் ஒரு மாணவர் பொதுத் தேர்வுகளைச் சந்திப்பதால் ஏற்படும் மன அழுத்தத்தைக் கருத்தில் கொண்டு நீதியரசர் முருகேசன் தலைமையிலான தமிழ்நாடு கல்விக்கொள்கைக் குழு முன்வைத்த யோசனையை ஏற்று, இந்த முடிவை எடுத்திருக்கிறது தமிழக அரசு. மாணவர்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த ஆசுவாசத்தை ஆசிரியர்கள் கொண்டாடுவதில் வியப்பில்லை.
தேர்வின் வரலாறு: 1964இல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி கல்விக் குழு மேல்நிலைக் கல்வியை அறிமுகம் செய்து ஒரு பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பதற்கான முன்மொழிவை வழங்கியது. பியூசி என்னும் பழைய முறை ரத்து செய்யப்பட்டு, பிளஸ் 2 அறிமுகமானது. பல மாநிலங்களில் மேல்நிலை வகுப்பைத் தனியாக இளநிலைக் கல்லூரிகள் (Junior Colleges) மூலமாக நடத்தத் திட்டமிட்ட நிலையில், தமிழ்நாட்டில் மேல்நிலை வகுப்புகளைப் பள்ளிகளுடன் இணைத்து நடத்தும் சிறப்பான முடிவெடுக்கப்பட்டது.