

பள்ளிச் சீருடைக்குப் பதிலாக, அவமானம் என்ற உடையை அவள் அணிய வேண்டியிருந்தது. கண்மணியின் காதல், அவளைப் பொறுத்தவரை அது வானவில்லின் வர்ணம்; ஆனால் சட்டத்தின் பார்வையில் அது ஒரு குற்றம். பதின்ம வயதின் காதல், அவளது சம்மதத்தையே அவளுக்கு எதிராகத் திருப்பியது. அவளைப் 'பாதிக்கப்பட்டவள்' என்று கூறி, அவளது உணர்வுகளுக்கு சட்டங்கள் விலங்கிட்டன.
அவள் காதலித்த விழியன், அன்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் ஒரு குற்றவாளியாக நிறுத்தப்பட்டிருந்தான். இருவரது பெற்றோரும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து, தங்கள் பிள்ளைகளைக் கண்டுபிடித்துத் தருமாறு மன்றாடியபோது, அவர்களது காதல் கதை காவல் நிலையத்தில் முடிந்தது.