

சென்னைக் கலைக்குழுவின் தயாரிப்பில், பிரளயன் நெறியாளுகையில், நவம்பர் 2ஆம் நாள் சென்னை மியூசிக் அகாதெமியில் அரங்கேற்றம் செய்யப்பட்டது ‘வனப்பேச்சி’ (பேரண்டச்சி) நாடகம். இங்கு பெரும்பாலும் வென்றவர்களே கதை சொல்லிகள்; வீழ்ந்தவர் கதையைக்கூட வென்றவர்கள்தான் சொல்லி வருகிறார்கள். இதற்கு மாற்றாக, வீழ்ந்தவர் கதையை வீழ்ந்தவரே சொன்னால் என்ன ஆகும் என்ற சிந்தனையில், மகாபாரத, ராமாயாணக் கதைகளை ஏகலைவனது பார்வையில் மறுவாசிப்பு செய்து, ‘உபகதை’ என்கிற நாடகத்தைத் தமிழுக்கு அளித்தவர் பிரளயன். அவ்வரிசையில் தற்போது அளித்துள்ள நாடகம்தான் ‘வனப்பேச்சி’.
தனியார் உயர்நிலைப்பள்ளி ஒன்றின் மாணவர்கள், வன விலங்குகள் சரணாலயம் ஒன்றிற்கு திட்ட ஆய்வுக் கல்விக்காக செல்வதுடன் நாடகம் தொடங்குகிறது. வனத்தில் புலிக்குட்டிகளைக் கண்ட மாணவன் சதீஷ், புலிக்குட்டிகளை அருகில் பார்க்கும் ஆவலில் புலிகள் பதுங்கி இருக்கும் பாறை மீது கல் எறிகிறான். வனச்சட்டப்படி இது குற்றம் என்பதால், அம்மாணவரையும் உடன் வந்த ஆசிரியர்களையும் அழைத்து அதிகாரி விசாரிக்கிறார். குற்றம் செய்தவர் மீது நடவடிக்கைகள் இருக்குமெனவும் எச்சரித்து அனுப்புகிறார்.