

யூ ஃபாக்சின் என்பவர் ஒரு சீன விஞ்ஞானி, தொழிலதிபர். ராணுவப் பயன்பாட்டுக்காக மேம்பட்ட குறைக்கடத்திகள் (advanced semiconductors) தயாரிப்பில் முன்னணியில் இருந்தார். அவரது நிறுவனத்தின் பெயர் ‘கிரேட் மைக்ரோவேவ் டெக்னாலஜி’. அவர் சீனாவின் ஊழல் எதிர்ப்புப் பிரிவால் அழைத்துச் செல்லப்பட்டார் என்கிற அறிவிப்பை அந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதற்குப் பிறகு அவரைப் பொதுவெளியில் பார்க்கவே முடியவில்லை.
சில சம்பவங்கள்: சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அந்நாட்டைச் சேர்ந்த அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா, அரசு வங்கிகளை விமர்சித்த பிறகு 2020இல் பொதுவெளியில் இருந்து ‘மறைந்தார்’. அவர் நிறுவனத்தின் மீது 2.8 பில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர், 2021இல் வெளிநாட்டில் மீண்டும் தோன்றினார். ஆனால், முன்பு பெரும் புகழ் வெளிச்சத்தில் இருந்த அவர், அதற்குப் பிறகு குறைந்த அளவில்தான் செயல்படுகிறார்.