

இரவிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து, விவசாயிகள் யூரியா உரத்தை வாங்கும் நிலை இந்தியாவில் ஏற்படும் என்று நாம் நினைத்திருப்போமா? தெலங்கானாவில் அது நிஜமாகவே நடக்கிறது. இந்த ஆண்டு பெய்த நல்ல பருவமழையும், அதன் விளைவாக நெல் சாகுபடிப் பரப்பு அதிகரித்ததும் யூரியாவின் திடீர் தேவைக்குக் காரணம் என்று அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.
ஆனால், இது முழு உண்மை இல்லை. பல அரசுகளால், பல தசாப்தங்களாகப் பின்பற்றப்படும் குறைபாடுள்ள பயிர் விலைக் கொள்கையின் நேரடி விளைவு இது. உரத் தேவையையும் பயிர் விலைக் கொள்கையையும் நாம் இணைத்துப் பார்த்தால் மட்டுமே இதைப் புரிந்துகொள்ள முடியும்.