

‘பெற்றுவிட்ட பிள்ளைகளோ எட்டுப் பேராம் / பெற்றோர்க்கும் தள்ளாத முதுமைக் காலம் / வற்றாத வறுமையின்றி என்ன வாழும்?’ என்று 60 ஆண்டுகளுக்கு முன்னர் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்திக் கவிதை பாடியவர் கவிஞர் கருணானந்தம். பெரியாரின் கொள்கைவழி நடந்து, பாரதிதாசன் பாட்டுப் பரம்பரையைச் சேர்ந்த கவிஞராகப் பரிணமித்தவர். மூட நம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, பகுத்தறிவு எனப் பல்வேறு பாடுபொருள்களில் கவிதைகளை இயற்றியவர்.
மத்திய அரசிலிருந்து மாநில அரசுக்கு... தஞ்சையில் உள்ள சுங்கம் தவிர்த்த சோழன் திடல் என்னும் இடத்தில் 15.10.1925 அன்று பிறந்தவர் கருணானந்தம். கரந்தைத் தமிழ்ச் சங்கம், குடந்தை அரசினர் கல்லூரி உள்ளிட்ட கல்விக்கூடங்களில் பயின்றவர். தமிழாசிரியர் ஆவதில் விருப்பம் கொண்டிருந்த கருணானந்தம், இளமையிலேயே தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். என்றாலும் அரசு அதிகாரியான அவரது தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, 1946இல் மத்திய அரசுப் பணியில் இணைந்தார்.