

கியோட்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுசுமு கிடகாவா, மெல்பர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ராப்சன், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் (பெர்க்லி) சேர்ந்த ஒமர் யாகி ஆகியோருக்கு 2025ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
சமையலறை மேடையில் தவறிச் சிந்தும் சாம்பார், காபி போன்ற திரவப் பொருட்களை உறிஞ்சி எடுக்கும் ‘ஸ்பாஞ்ச்’ போல, காற்றிலிருந்து கார்பன் டை ஆக்சைடு - நீராவியையும், குடிநீரிலிருந்து பாலிஃப்ளூரோஅல்கைல் (PFAS) போன்ற ஆபத்தான நச்சு வேதிப் பொருட்களையும் உறிஞ்சி எடுக்கும் அற்புதத்தன்மை கொண்ட உலோக - கரிமக் கட்டமைப்பு (MOF) பொருட்களை வடிவமைத்து, தயாரிக்கும் வேதியியல் நுட்பத்தைக் கண்டுபிடித்ததற்காக இந்த அங்கீகாரம் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒமர் யாகி, ஜோர்டானில் உள்ள அகதி முகாமில் பாலஸ்தீனத் தம்பதிக்குப் பிறந்து, பின்னர் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தவர்.