Last Updated : 11 Aug, 2018 09:15 AM

 

Published : 11 Aug 2018 09:15 AM
Last Updated : 11 Aug 2018 09:15 AM

மானுடம் கண்டுணர்ந்த மகத்தான தரிசனம்!

தஸ்தயேவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’ நாவலின் நாயகனான ரஸ்கொல்நிகாவுக்கு ஏராளமான தத்துவச் சிக்கல்கள் மூளைக்குள் நொதித்தபடியே இருக்கின்றன. தெய்வம் இருக்கிறதா இல்லையா என்பது மாதிரியான அடிப்படைச் சந்தேகங்கள், வாழ்வின் அர்த்தம்தான் என்ன போன்ற ஆதார இருத்தலியக் குழப்பங்கள், நிறைவின்மையும் குற்றவுணர்ச்சியும் நெருக்கித் தள்ளுவதன் ஊடாக உருப்பெறும் பதற்றங்கள். ஆனால், சைபீரியச் சிறையில் அடைந்து கிடக்கும் ரஸ்கொலுக்கு சோனியாவைக் கண்டதும் அதுவரையிலான அவனது வாழ்நாள் தேடல்கள் அத்தனையும் முக்கியத்துவம் இழந்துவிடுகின்றன. அவளது விழிகளில் துள்ளும் காதலின் பரவசம் அவனையும் தொற்றிக்கொள்கிறது. சிறை இருப்பையும் மீறி வந்தடையும் எல்லையில்லா மகிழ்ச்சியை உணர்ந்து அவனால் வியக்கக்கூட முடிகிறது. பெண் நிகழ்த்தும் அற்புதங்கள் முன் மாபெரும் கேள்விகள் திணறிப்போகின்றன இல்லையா? காதலி(யி)ன் கருணையைவிட மானுடம் கண்டுணர்ந்த மகத்தான தரிசனம் ஏது?

ஆண் - பெண் இடையேயான உறவுச் சிக்கல்களை நெருங்கி அதன் தீராத விசித்திரங்களை நுட்பங்களுடன் அள்ளி வைத்தவையே சிறந்த இலக்கிய ஆக்கங்களாகப் பேருரு கொண்டுள்ளன. பெருக்கெடுத்தோடும் ஜீவநதியில் ஒவ்வொரு வளைவும் ஒவ்வொரு சுழியும் வேறு வேறு தினுசு. எவ்வளவோ சொல்லிவிட்ட பிறகும் ஏதோவொன்று மிச்சமிருப்பதைக் கண்டடைந்ததனால்தான் இலக்கியக் கர்த்தாக்கள் பலரும் மீண்டும் மீண்டும் உறவுகளின் கதகதப்பில் கட்டுண்டு கிடந்தார்கள். வெப்பக்கிடங்கின் பொசுக்கலுக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தார்கள். உறவின் விரிசலிடையே எந்நேரமும் புகைந்துகொண்டிருக்கும் காற்றின் நமைச்சலை எழுதத் துணிந்தார்கள். மனதின் ரகசிய வேட்கைகளும் புரிபடாத சூட்சமங்களும் உறவுகள் வழியாகவே வெளிச்சத்துக்கு வருகின்றன. நம்மைக் குறித்து அதுகாறும் அறிந்திராத முகமூடிகளை உறவுச் சூழ்நிலைகள் அம்பலப்படுத்தும்போது உண்டாகும் திகைப்புகள் எந்தவொரு பரபர த்ரில்லருக்கும் ஈடானது.

டால்ஸ்டாயின் சிறந்த நாவல், ‘போரும் வாழ்வு’மா அல்லது ‘அன்ன கரீனினா’வா என உலகெங்கும் வாதிடுகிறார்கள். பிரம்மாண்டமான வரலாற்றுக் காப்பியத்துடன் ஒப்பிடத் தகுந்த வலிமையான கூறுகளைக் காதல் - குடும்பக் கதையான ‘அன்ன கரீனினா’வும் தன்னகத்தே திரட்டிக்கொண்டிருந்ததே அதற்குக் காரணம். புறவுலகின் திட்டவட்ட வரையறைகளுக்கும் நியதிகளுக்கும் ஆட்படாமல் நழுவிக்கொள்ள தருணம் வாய்க்குமெனில், ஓர் எளிய மனம்கூட வெட்டிக்கொண்டு போகத் தயாராக இருக்கும். அதன் நெளிந்தாடும் எண்ணவோட்டங்களைப் பின்தொடர்ந்தவாறு அதிர்வுகளையும் கோணங்களையும் தேர்ந்த ஓவியரின் லாகவத்துடன் தீற்றிச்செல்லத் திராணி வேண்டும். அதனால்தான், டால்ஸ்டாய்க்கும் ‘அன்ன கரீனினா’வே மனத்துக்கு நெருக்கமான புதினம். ஆம், ‘போரும் வாழ்வையும்’விட!

எம்.கோபாலகிருஷ்ணனின் மூன்றாவது நாவலான 'மனைமாட்சி', உறவுகளினூடாக மனம் சொடுக்கும் மேற்கூறிய சவால்களைக் கண்ணுக்குக் கண் சந்திக்கிறது. நெஞ்சம் வீறிடும் சன்னதங்களை நெருங்கிவந்து ஓர் இதமான அணைப்பைத் தந்துவிட்டுச் சமன்கொள்ளவும் செய்கிறது. அன்பின் துணையோடு வாழ்வதன் வழியாகவே மேன்மையுறும் கலையைக் காட்டிச்செல்லும் சரளம் கோபாலகிருஷ்ணனுக்கு வாய்த்திருக்கிறது. அன்பாய் இருப்பது பற்றிய சில பிரமைகளை உடைத்துப்போட்டிருக்கிறது. அன்பின் வழி மனம் நிகழ்த்தும் பாய்ச்சல்களை எத்தனையோ பேர் எழுதிவிட்டார்கள். ஆனால், அன்பின் நீர்ச்சுனை வற்றிவிடும் தருணத்திலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ளத் தத்தளிக்கும் மனதின் ஊசலாட்டத்தை இத்தனை கருணையுடன் வேறு எவரும் அணுகியதில்லை. வெடித்துச் சிதறும் உணர்ச்சிகரங்களுக்கு இடையேயும் மௌனத்தைத் தேர்ந்துகொண்டிருக்கும் கதைசொல்லியின் நிதானம் நாவலெங்கும் இழைந்திருப்பது மற்றொரு ஆச்சரியம். மனிதர்களின் மீட்பு மட்டுமல்லாது அவர்தம் பலவீனங்களும் அசட்டுத்தனங்களும்கூட ஜீவனுடன் திரண்டிருப்பதே ‘மனைமாட்சி’யின் சாதனை!

குகைக் காலம் தொட்டு நாம் கூட்டு சேர்ந்து வாழ்ந்தாலும் மனதளவில் தனித்தனித் தீவுகள்தான். அதுவும் வாழ்நாள் முழுக்க ஒருவரை ஒருவர் அருகி நின்று உண்டு.. உறங்கி.. உறுமி.. விரும்பி.. வெறுத்துப் பல விதமான தந்திரங்களுடன் வாழ்க்கையை நீட்டித்துக்கொண்டிருக்கிறோம். பெரிய எதிர்பார்ப்புகள் சட்டென்று வடிந்து சில்லறைக் காரியங்களில் ஈடுபடத் தொடங்கிவிடுகிறோம். அது வாழ்வு மீதான ஒருவித பழிவாங்கல் மட்டுமே. பெரும்பாலான ஆண்களும் பெண்களும் அடித்துக்கொள்ளாமல் அனுசரித்துப்போவதேகூட வாழ்வு குறித்த சலிப்பினால்தான். எனினும், யுகம் யுகமாய் கை மாறி வந்து ஒருவாறு சாசுவதம் கொண்டுவிட்ட குடும்ப அமைப்பில் நவீன காலத்துச் சிக்கல்கள் கால்கள் பரப்பி ஆக்கிரமித்துக்கொள்ளும்போது தளர்ந்த முடிச்சுகள் மேலும் இறுக்கம் கொள்கின்றன. அவற்றை மொழியினூடாக அணுகி அதன் எல்லையற்ற சாத்தியக்கூறுகளை நாவலாசிரியர் விரிவாக்கியபடியே நகர்கையில் நமக்குக் கிடைக்கிற அனுபவங்களே வேறு. நாம் நெஞ்சம் விம்மி சரிந்துகொள்வதற்கான கணங்களையும் காயங்களை விழுங்கி செரித்துக்கொண்டு நகர்வதற்கான வலுவையும் அது தன்னுள் ஒருசேரப் புனைந்துகொண்டிருக்கிறது. நாவலின் கதை மாந்தர்கள் இடையே வெட்டிச் சிணுங்கல்கள் இல்லை. ஆனால், துடிப்புகளும் துயரங்களும் தெளிந்தெழுந்து திடுக்கிட மினுக்குகிறது.

பல்வேறு சமூகப் பின்னணிகளும் உறவுச் சிக்கல்களும் உடைய வெவ்வேறு இணைகளின் கதைகள் ஒரே கூரையின் கீழ் உருப்பெற்ற நாவல் ‘மனைமாட்சி’. அவற்றின் இணைப்புச் சரடாக அசைவு கொள்பவை நதிகள். பெண்களும்தான். ராஜாம்பாயோ மதுமிதாவோ பெண்களின் அழகுகளைப் போற்றாது அவர்களது இயல்புகளை எடுத்துவைக்கும் பக்குவம் நாவல் முழுக்க விரவியிருக்கிறது. ஒன்றை ஒன்று ஊடறுத்துச்செல்லும் கதைகளில் வெளியேறும் பல்லாயிரம் காலத்துப் பெருமூச்சுகள் கழுத்தருகே சுழன்றடித்தவாறும் இருக்கின்றன. கதாபாத்திரங்கள் அனைவரும் நாம் அன்றாடம் கடக்கும் பழகிய முகங்கள்தான். நமக்குத் தெரிந்த கதைகளாகக்கூட இருக்கலாம். இந்நாவல் அவற்றுள் பொதிந்திருக்கும் பரிதாபத்திற்குரிய வாழ்வை உளவியல் நுட்பங்களுடன் அலுக்காத நடையில் சித்தரித்துச் செல்வதோடல்லாமல் அவை ஒளித்து வைத்திருக்கும் கசடுகளை வெளிக்கொணர்ந்த விதங்களில் அசத்தலான துல்லியத்தையும் பேணுகிறது. மனிதர்களின் கீழ்மைகளைக் கண்டு நாம் வழக்கமாகப் புலம்புவதைப் போல மனம் வெதும்பி முகம் திருப்பிக்கொள்வதோடு முடிந்திருந்தால் பத்தோடு பதினொன்றாகப் போயிருக்கும். அதுவல்ல ஆசிரியரின் நோக்கம். மனச் சிடுக்குகளின் நெருக்கடிகளுக்குள்ளாக எழுந்துவரும் மேன்மைகளைக் கவனப்படுத்துவதாலேயே இது தனித்து நிற்கிறது.

கதாபாத்திர வார்ப்பிலும் கட்டுப்பெட்டித்தனங்கள் ஏதுமில்லை. இன்ன இன்ன நபர்கள் இப்படி இப்படி வந்துபோனால் சௌகர்யம் என்கிற வசதியான வரையறைகளைப் புறந்தள்ளிவிட்டு, அவர்கள் தன்போக்கில் வெளிப்பட அனுமதிக்கும் துணிச்சல் மிகவும் பிடித்திருந்தது. அதனாலேயே அங்கே அறிதல் நிகழ்கிறது. காமமே குடும்ப அன்றாடங்களைத் தீர்மானிக்கும் மறைமுக சக்தி எனும் புள்ளியைத் தொட்டு நிற்கிறது. ஐயமே இல்லை, இது எம்.கோபாலகிருஷ்ணனின் முந்தைய நாவலான ‘மணல்கடிகை’யை மீறிச்செல்லும் ஆக்கம்தான்!

- கோகுல் பிரசாத், விமர்சகர்.

தொடர்புக்கு: gokulprasad23@gmail.com

மனைமாட்சி

எம்.கோபாலகிருஷ்ணன்,

தமிழினி பதிப்பகம்,

63, நாச்சியம்மை நகர்,

சேலவாயல்,

சென்னை - 51.

விலை: ரூ.580

தொடர்புக்கு: 9344290920

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x