

இரண்டு தரப்புகளுக்கு இடையேயான அடிதடி சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்து நலமுடன் திரும்புகிறார். இது தொடர்பான குற்ற வழக்கில் எதிர்த் தரப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறையில் இருந்து, பிணையில் வெளிவருகின்றனர். பின்னர், இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு, சமாதானம் ஆகி விடுகிறார்கள். இந்நிலையில், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் குற்ற வழக்கின் விசாரணையில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க முடியுமா? - அகிலேஷ், திருநெல்வேலி
இரண்டு தரப்புக்கும் இடையே அடிதடி சம்பவம் ஏற்பட்டு அதில் ஒரு தரப்பைச் சேர்ந்த ஒருவர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் மீது முந்தைய இந்திய தண்டனைச் சட்டத்தின் 307, 325, 326, 506(2), 120பி (தற்போதைய பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 109, 118(2), 118 (3), 351, 61) பிரிவுகள் படி, கொலை முயற்சி, அடிதடி, குற்றமுறு மிரட்டல், கொடுங்காயம் ஏற்படுத்துதல், கூட்டுச்சதி் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும். இந்த குற்ற வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு குறைந்தது 7 ஆண்டுகள் வரையோ அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறை தண்டனையோ விதிக்க முடியும்.