

இவரை அறிந்தவர்கள் மிகக் குறைவு. ஆனால், அவர்கள் அனைவருடைய மதிப்பீடும் ஒன்றுபோல் இருக்கிறது. ‘இப்னு கல்தூனுக்கு (Ibn Khaldun) இணையான ஒரு வரலாற்றாளர் இதுவரை இஸ்லாமிய உலகிலிருந்து தோன்றியதில்லை. செறிவாகவும் சுவையாகவும் வரலாறு எழுத இவரைப் போல் யாருமில்லை. வரலாற்றில் இவருடைய பங்களிப்பை அற்புதம் என்று மட்டுமே அழைக்க முடியும். இருந்தும், இவர் ஏன் பரவலாக அறியப்படவில்லை? விடை நம்மிடம்தான் இருக்கிறது. காலம்காலமாக இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாமியர் அல்லாதோர் ஆர்வம் செலுத்துவதில்லை என்பதால், அந்த வட்டத்துக்குள் இவர் அடக்கப்பட்டுவிட்டார்.
வரலாற்றின் தந்தைகளுள் ஒருவராகக் கருதப்பட வேண்டிய இப்னு கல்தூன் (1332-1406) துனீஷியாவின் தலைநகரான துனீஸில் செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்தவர். இலக்கியம், சட்டம், அறிவியல் என்று பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர். அரசியல் ஆலோசகர் தொடங்கி நீதிபதி வரை பல்வேறு பதவிகளை வகித்தவர். இவருடைய ஆய்வின் மையம் இவர் பிறந்து, வளர்ந்த வட ஆப்ரிக்க நிலப்பரப்பு. 7ஆம் நூற்றாண்டில் அறிவியல், இலக்கியம், பண்பாடு, கட்டுமானம் என்று பல துறைகளில் அரபு நாகரிகம் குறிப்பிடத்தக்க பாய்ச்சல்களை நிகழ்த்தியது. ஸ்பெயின் முதல் மத்திய ஆசியா வரை இஸ்லாத்தின் தாக்கம் படர்ந்திருந்தது.