

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ’நீலன்’ என்கிற பெயரை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். அவன் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வசிக்கும் ஆதிவாசிச் சிறுவன். அவனுக்குக் காடு குறித்தும் அங்கு வாழும் உயிரினங்கள் குறித்தும் அனுபவ அறிவு ஏராளம். அவனிடம் அனுபவப் பாடங்களைப் படிப்பதற்காகக் கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் வருவார்கள். வன உயிரினங்களால் பிரச்சினை என்று உதவி கேட்டு வன அதிகாரிகளும் அவனைத் தேடி வருவார்கள். இப்படிக் கற்றோருக்குப் பாடம் எடுக்கும் அளவுக்கு கள அனுபவம் கொண்ட நீலனைப் போலவே, நீலன் கதாபாத்திரத்தை உருவாக்கிய கொ.மா.கோதண்டமும் அதிகம் படித்தவரில்லை. ஆனால், கற்றோரிடமிருந்து இலக்கணத்தையும் இலக்கியத்தையும் கற்றுக்கொண்டு, தன்னை மிகச் சிறந்த எழுத்தாளராக வளர்த்துக்கொண்டவர்.
கதை, நாவல், கவிதை, அறிவியல் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருந்தாலும் கொ.மா.கோதண்டம் என்றதும் நினைவுக்கு வருவது நீலன் கதைகளே. நீலனை வைத்து மட்டுமே நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளைப் படைத்திருக்கிறார். இந்தக் கதைகளைப் படித்தாலே, காடுகளைப் பற்றியும் கானுயிர்களைப் பற்றியும் புரிந்துகொள்ள முடியும். கதையாக இருந்தாலும் கதைகளில் வரும் ஒவ்வொரு விஷயமும் அறிவியல் உண்மையே. கதைதானே என்று போகிற போக்கில் ஒரு சிறு விஷயத்தையும் அலட்சியமாக அவர் கையாண்டதில்லை.