

இந்தியக் கண்டத் தட்டும் (tectonic plate) யூரேசியக் கண்டத் தட்டும் சேரும் இடத்தில் இருப்பதால் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கங்களுக்குக் குறைவில்லை. குறிப்பாக, இந்து குஷ் மலைத்தொடர் பகுதிகளில் நிலநடுக்கங்கள் நிகழ்வது வழக்கம். 2025 ஆகஸ்ட் இறுதியில் நிகழ்ந்த 6 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம், கிழக்கு ஆப்கானிஸ்தானைப் பெரிதும் பாதித்தது. ஏறக்குறைய 2,200 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளன.
நிலநடுக்கங்கள் காரணமாக மண் சரிவுகள் ஏற்பட்டு, அது சாலைகளில் போக்குவரத்தை முடக்கி உள்ளது. மீட்புப் பணியும் தாமதமானது. ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதைய தாலிபான் அரசுக்கு இந்த நிலநடுக்கங்கள் ஒரு சவால்தான். இயற்கைப் பேரிடர்களை தாலிபான் அரசு சமாளிக்க முடியாமல் திணறுவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.