

‘இந்திய இதழியல் துறையின் பீஷ்மர்’ எனப் போற்றப்பட்ட டி.ஜே.எஸ்.ஜார்ஜின் மறைவு, அறிவுலகத்துக்கு நேர்ந்திருக்கும் மிகப் பெரிய இழப்பு. சர்வதேச அளவில் புகழ்பெற்றிருந்த ஜார்ஜ் சுதந்திரச் சிந்தனையாளர், பத்திரிகைச் சுதந்திரத்துக்காக இறுதிவரை குரல்கொடுத்தவர். உயர்ந்த விழுமியங்கள் அடங்கிய அவரது வாழ்க்கை, இன்றைய இளைஞர்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியப் பாடம்.
முதல் தேசத்துரோக வழக்கு: 1928 மே 7இல் கேரளத்தில் பிறந்தவர் ஜார்ஜ். அவரது தந்தை தையில் தாமஸ் ஜேக்கப் நீதிபதியாகப் பணிபுரிந்தவர். அதனால்தானோ என்னவோ எப்போதும் நியாயத்தின் பக்கம் நிற்பதாக ஜார்ஜின் வாழ்க்கைப் பயணம் அமைந்தது. சென்னை கிறித்துவக் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்ற ஜார்ஜ், 1947இல் மும்பை சென்றார். அங்கு ஆங்கில நாளிதழ்களில் சேர முயன்று வந்தார்.