

உலகப் புகழ்பெற்ற கவிஞர்களான கதே, ரில்கே, கோ யுன். சில்வியா பிளாத், தாகூர் போன்றவர்கள் நாவல் எழுதியிருக்கிறார்கள். கவிஞர்கள் எழுதிய நாவல்கள் அதன் கவித்துவ மொழிநடையால், புதுமையான கதையால் தனித்துவமாக விளங்குகின்றன. அந்த வரிசையில் வைத்துப் பேச வேண்டிய நாவல் மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் எழுதிய ‘சுமித்ரா’. 2012இல் வெளியான இதனைக் கே.வி. ஷைலஜா சிறப்பாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். முப்பத்தி எட்டு வயதான சுமித்ரா இறந்து கிடப்பதில் நாவல் தொடங்குகிறது. இது வயநாட்டில் வசித்த ஒரு பெண்ணின் கதை. சுமித்ரா இறந்துவிட்டாள் என்ற ஒற்றை வரிக்குப் பின்னால் ஒரு பெண்ணின் முழு வாழ்க்கையும் அடங்கியிருக்கிறது. முழு நாவலும் அவளைப் பற்றியது. நினைவோட்டங்களின் வழியே கதை விவரிக்கபடுகிறது.
சுமித்ராவின் கணவர், மகள், தோழிகள், அவள் வெளிப்படுத்திய. வெளிப்படுத்தாத ஆசைகள், ரகசியங்கள் அவள் அன்பு காட்டிய மனிதர்கள். அவளைப் புரிந்து கொண்டவர்கள், புரிந்து கொள்ளாதவர்கள் என அனைத்தும் நாவலில் வெளிப்படுகிறது. அதோடு வயநாட்டுப் பழங்குடியினரின் வாழ்க்கை நிலையினையும் நாவல் நுட்பமாக விவரிக்கிறது. மனிதனின் வாழ்க்கை என்பது மரணத்துடன் முடிந்து விடுவதில்லை. உடல், தான் மறைந்து போகிறது. இறந்தவர்கள் நினைவில் வாழத் தொடங்குகிறார்கள். மரண வீட்டில் ஒலிக்கும் அழுகை இறந்தவரின் பொருட்டானது மட்டுமில்லை, அது ஒரு நினைவூட்டல்; மரணத்தை எவராலும் வெல்லமுடியாது என்ற நினைவூட்டல்.