

பின்நவீனத்துவச் சொல்லாடல்கள் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் தமிழில் முகிழ்க்கத் தொடங்கியபோது எழுத வந்தவர் ரமேஷ் – பிரேதன். தெரிதா, ஃபூக்கோ லியோடார்ட் போன்ற பின்நவீனத்துவச் சிந்தனையாளர்களைக் கற்றுக்கொண்டு, பிரேமுடன் இணைந்து எழுதிய ரமேஷின் எழுத்துகள், தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலில் பெரும் தாக்கத்தைச் செலுத்தின. கோட்பாடுகள் சார்ந்து பேசுபவர்கள் குறைவாக இருந்த தமிழ் எழுத்துலகில், ரமேஷும் பிரேமும் இணைந்து கட்டமைத்த பனுவல்கள் எண்பதுகளின் இறுதியிலும், தொண்ணூறுகளிலும் இலக்கிய உலகில் பேசுபொருளாயின.
‘புதைப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்’, ‘சொல் என்றொரு சொல்’ ஆகிய நாவல்களும், ‘இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும்’, ‘பேரழகிகளின் தேசம்’, ‘கருப்பு வெள்ளைக் கவிதை’ போன்ற கவிதை நூல்களும், ‘சிதைவுகளின் ஒழுங்கமைவு – பின்நவீனத்துவப் பிரச்சனைப்பாடுகள்’, ‘பேச்சு மறுபேச்சு’, ‘இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்’ முதலிய கட்டுரை நூல்களும், ‘முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன’, ‘பரதேசி’, ‘மகாமுனி’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கன. பிரேமைப் பிரிந்த பிறகு, ‘ரமேஷ் பிரேதன்’ என்னும் பெயரில், இலக்கிய உலகில் ரமேஷ் தீவிரமாக இயங்கினார்.