

நீதி வழங்குவதற்காகக் கட்டிடங்களிலிருந்து வெளியே களத்துக்கு வந்து இந்திய நீதித் துறை இயங்கிய நிகழ்வுகள் உண்டு. மணிப்பூரில் மெய்தேய், குகி இன மக்களிடையே நிகழ்ந்த கலவரத்தில் பாலியல் வன்கொடுமைகள், கொலைகள் நிகழ்ந்தன. மணிப்பூரை மயானத்தீ பற்றியது. குடியரசுத் தலைவர் ஆட்சி வந்தது. செய்திகளை உச்ச நீதிமன்றம் தாமாகவே சுவீகரித்து விசாரித்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் (தற்போதைய தலைமை நீதிபதி) தலைமையில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய ஒரு குழு அங்கு சென்றது. கலவரப் பகுதிகள் வழியே பயணித்து 50,000 அகதிகள் தங்கிய முகாமைப் பார்வையிட்டு மருத்துவ, சட்ட உதவிகள் முகாம் நடத்த வழிகாட்டியது. அமைச்சர்களே அங்கு போகாத அந்தக் காலக்கட்டத்தில் அரசு நிர்வாகத்தை அக்குழு இயங்கவைத்தது.