

ரோமப் பேரரசு என்றதும் வளமும் வனப்பும் வண்ணமும் கொழிக்கும் ஒரு சித்திரம் நம் மனக் கண்ணில் விரிகிறது அல்லவா?! அதற்குக் காரணமானவர்களுள் ஒருவர் டைடஸ் லிவி (Titus Livy). ரோமின் வரலாற்றைக் கட்டமைப்பதற்கு என்றே தன் வாழ்நாளின் பெரும்பகுதியைச் செலவிட்டவர். மகிழ்வையும் நிறைவையும் மட்டுமல்ல, சம அளவில் வலியையும் வேதனையையும்கூட இப்பணி அவருக்கு அளித்திருக்க வேண்டும்.
காரணம், ரோமின் வெற்றிகளை மட்டுமல்ல, மாபெரும் சரிவுகளையும் அவர் ஆராய வேண்டியிருந்தது. ரோமை உயிரினும் மேலாக நேசித்த ஒருவரால் அதன் வீழ்ச்சியை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்; எவ்வாறு சமநிலையோடு பதிவுசெய்ய முடியும் என்பதற்கு லிவியின் படைப்பே சாட்சி. லிவி ரோமை நேசித்தது உண்மை.