

அதிவீரபாண்டியன் ஓர் அதிஅற்புத அரூபக் கலைஞன். அபூர்வமான படைப்பு மேதை. சர்வதேசக் கலை அரங்கில் கவனம் பெற்ற தமிழக ஓவியர்களில் ஒருவர். நெய்தல் நிலக் காட்சிகளின் மகத்தான ஓவியன். அவர் வாழ்க்கையின் ஆதாரமாக அமைந்த, கடலும் கடல் சார்ந்த நிலப் பகுதிகளும் உயிர் கொண்ட அழகிய வெளிப்பாடுகளே அவரின் அரூப ஓவியங்கள்.
ஆரம்பத்தில் வண்ணங்களின் மாய இசைக் கோவைகளாக அவருடைய ஓவியங்கள் உருக்கொண்டன. ஓவிய வெளியிலான அவருடைய பயணத் தொடக்கத்தில், வண்ணங்களில் மாயவித்தைகள் புரிபவராகத் திகழ்ந்தார். இளம் வயதிலேயே வண்ணங்களைக் கையாள்வதில் இவர் அடைந்த தேர்ச்சி அபாரமானது. வண்ணங்களை அழுத்தமாகவும் தீர்க்கமாகவும் மனோபாவங்களுக்கேற்ற தொனி அழகோடும் கையாண்டவர். வண்ணமும் வடிவமும் இசைமை கொண்டதில் அழகு பெற்றவை இவரின் ஆரம்ப கால ஓவியங்கள்.