

தில்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் கடந்த நூற்றாண்டின் எண்பதுகளில் ‘ஆதான் பிரதான்’ என்னும் திட்டத்தின் கீழ் இந்திய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்களில் தலைசிறந்ததாக விளங்கிய செவ்வியல் நாவல்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டது. அவ்வகையில் பத்துக்கும் மேற்பட்ட பிறமொழி நாவல்கள் தமிழில் வெளிவந்தன. 1987இல் எச்.வி.சுப்பிரமணியன் என்பவரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ என்னும் நாவலும் அவற்றில் ஒன்று.அதன் மூல ஆசிரியர் கன்னட மொழியின் தலைசிறந்த எழுத்தாளரான எஸ்.எல்.பைரப்பா. தமிழ்ச்சூழலில் அவருடைய அறிமுகம் அப்போதுதான் தொடங்கியது.
அந்த நாவலில் இடம்பெற்றிருக்கும் கதைமாந்தர்கள் மிகமிக எளியவர்கள். ஆனால் சிக்கலான மனப்போக்கை உடையவர்கள். எல்லாம் எனக்குத் தெரியும் என்கிற மனப்போக்கு கொண்டவர்கள் சிலர். ஒரு வேலையும் செய்யாமல், வேளாவேளைக்கு சாப்பாடுத்தன்னைத்தேடி வரவேண்டும் என்கிற மனப்போக்கு கொண்டவர்கள் வேறு சிலர். எப்போதும் பிறரை ஏமாற்றியும் வஞ்சித்தும் பிழைக்கிற மனப்போக்கு கொண்டவர்கள் இன்னும் சிலர். இப்படிப்பட்டவர்களே தாயாகவும் பிள்ளைகளாகவும் உறவினர்களாகவும், ஒரே குடும்பத்தில் நிறைந்திருக்கிற சூழலைத்தான் தன் நாவலில் காட்சிப்படுத்தியிருக்கிறார் பைரப்பா. அவர்களைத் தம் அன்பாலும் கருணையாலும் கண்டிப்பாலும் நேர்ப்படுத்தி வாழ்க்கையில் முன்னேறலாம் என்கிற மனப்போக்குடன் மருமகளாக வருகிறாள் ஒருத்தி.