

வரதட்சிணைக் கொடுமை, அதனைத் தொடர்ந்த குடும்ப வன்முறைகளால் இளம்பெண்கள் இறக்கும் செய்திகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். அண்மையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா, வரதட்சிணைக் கொடுமை, குடும்ப வன்முறையால் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்றைய காலக்கட்டத்தில், பெரும்பாலும் நன்றாகப் படித்த, வேலைக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய பெண்கள் கூட இத்தகைய விபரீத முடிவுக்குச் செல்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண்பது?
வரலாற்றுப் பின்னணி: புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவில் 2019-2021 காலக்கட்டத்தில் 31.2% பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அதில் வரதட்சிணைக் கொடுமைகள், குடும்பத்தில் பாலியல் வன்முறைகள் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களே அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆழமாகப் பார்த்தால், படித்து வேலைக்குச் செல்கின்ற, பொருளாதாரத்தில் பங்கெடுக்கும் பெண்களே இக்கொடுமைகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்கிற தகவலும் அதிர்ச்சி அளிக்கிறது.