

கணினியில், இணையத்தில் பல்வேறு மொழிகளின் எழுத்துகளை இன்றைக்கு நம்மால் எழுதவும் படிக்கவும் முடிகிறது. ஆனால், ஒருகாலத்தில் உலகம் முழுவதிலும் ஆங்கிலத்தைத் தவிர, பிற மொழிகளின் எழுத்துகளை எழுதுவதிலும் படிப்பதிலும் சிக்கல்கள் இருந்தன. தவிர, ஒவ்வொரு மொழியின் எழுத்துகளுக்குப் பல்வேறு எழுத்துரு முறைகள் இருந்தன. ஒரே மொழியில் ஓர் எழுத்துரு முறையில் எழுதப்பட்ட கட்டுரையை, அதே மொழியில் இன்னொரு எழுத்துரு முறையில் இயங்கும் மென்பொருள் வழியே படிக்க முடியாது என்கிற நிலை இருந்தது.
ஆகவே, உலகில் உள்ள எல்லா மக்களும் கணினியில், இணையத்தில் எளிதில் புழங்க, உலகின் எல்லா எழுத்து முறைகளையும் (Writing Systems) உள்ளடக்கி ஓர் எழுத்துக் குறியேற்றத் தரநிலை (Character Encoding Standard) உருவாக்கப்பட்டது. அதற்குப் பெயர்தான் ஒருங்குறி என்கிற ‘யுனிகோடு’ (Unicode) எழுத்துரு முறை.