

கடவுச்சீட்டு (Passport) என்பது சர்வதேச அளவில் நம் குடியுரிமை அடையாளத்தை உறுதிசெய்கிற ஆவணம். வெளிநாடுகளில் வேலைசெய்யவும் கல்வி கற்கவும் கடவுச்சீட்டு மிகவும் அவசியம். சுற்றுலாப் பயணத்துக்கும் அது முக்கியமான ஆவணம். வெளிநாட்டில் பிரச்சினைகள் ஏற்படும் சூழலில், அங்குள்ள இந்தியத் தூதரகம் நமக்கு உதவ வேண்டும் என்றால், கடவுச்சீட்டு கட்டாயம் தேவைப்படும். உள்ளூரில்கூடச் சில அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கடவுச்சீட்டு பயன்படுகிறது.
இந்தியாவில் வழங்கப்படும் கடவுச்சீட்டு அட்டையின் நிறம் என்ன என்று கேட்டால், பலரும் நீலம் என்று பதில் அளிப்பார்கள். இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, கனடா, பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகளில் நீல வண்ணக் கடவுச்சீட்டுகள்தான் மக்களுக்கு வழங்கப்படுகின்றன. சௌதி அரேபியா, மொராக்கோ, பாகிஸ்தான், நைஜீரியா போன்ற பல இஸ்லாமிய நாடுகள் பச்சை நிறத்தில் கடவுச்சீட்டுகளை வழங்குகின்றன. நியூசிலாந்து, ஜாம்பியா போன்ற சில நாடுகள் கறுப்பு வண்ணக் கடவுச்சீட்டுகளை வழங்குகின்றன.