

பழைமை வாய்ந்த சென்னை எழும்பூர் அருங்காட்சியக அரங்கு. அதற்குள் நுழைந்தால் பியானோ இசைக்கலைஞர் அனில் சீனிவாசனும், கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் சிக்கில் குருசரணும் இருந்தார்கள். பொதுவாக நம் ஊரில் ஃபியூஷன் இசை நிகழ்ச்சிகள் குறைவு. அதுவும் மேற்கத்திய செவ்வியல் இசையின் முதன்மைக் கருவியான பியானோவும் கர்நாடக வாய்ப்பாட்டும் முற்றிலும் புதிய கலவை. இத்துடன் தாளக் கருவியான மிருதங்கமும் (சுமேஷ் நாராயண்) இணைந்தது. லைவ் ஃபார் யு, ஸ்கிஆர்ட்ஸ்ரஸ் ஏற்பாடு செய்த ‘ஜோதிர்கமய இசை விழா’வில்தான் இந்த நிகழ்ச்சி அரங்கேறியது.
திங்கள்கிழமை மாலையில் போக்குவரத்து நெரிசலில் நீந்தி எழும்பூர் வந்து சேர்ந்தவர்களின் மனதை சாந்தப்படுத்தி, நிகழ்ச்சிக்குத் தயார்ப்படுத்தும் விதமாக தாலாட்டுப் பாடலுடன் தொடங்கியது. இதை அனில் சீனிவாசனே மேடையில் அறிவித்தார். பிற்காலத்தில் இசைக்கலைஞராக மாறிய மகாராஜா சுவாதித் திருநாள் குழந்தையாக இருந்தபோது, இரயிமன் தம்பி இயற்றிய ‘ஓமணத்திங்கள் கிடாவோ’ என்கிற தாலாட்டுப் பாடல் அது. இந்த கர்நாடகப் பாடலுடன் போலந்து பியானோ கலைஞர் ஷாபினின் (Chopin) மேற்கத்திய தாலாட்டு இசைக்கோப்பு இணக்கமாக இழைந்தது.