

ஆகஸ்ட் 20 அன்று இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியிருக்கும் இணையதள விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025 மிக முக்கியமான சட்டம். இந்தச் சட்டத்தின்படி இனி, இணையதளச் சூதாட்டம் (பணம் வைத்து இணையத்தில் விளையாடும் விளையாட்டுகள்) தடை செய்யப்படுகின்றன. அது மட்டும் அல்ல... இந்த மாதிரியான தளங்களுக்கு விளம்பரம், ஸ்பான்சர்ஷிப் என எதுவும் இருக்கக் கூடாது. விதிகளை மீறினால் கடும் அபராதத்தை அரசாங்கம் விதிக்கும். சிறைத் தண்டனைகூடக் கிடைக்கலாம்.
எதற்காக அரசு இப்படி ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது? பணம் வைத்து இணையத்தில் விளையாடும் சூதாட்டம் பலரையும் பல்வேறு நிதிச் சிக்கல்களுக்கு ஆளாக்கி இருக்கிறது; பலரின் வாழ்வை அழித்திருக்கிறது என்பதை அன்றாடம் நாளிதழ் செய்திகள் பார்த்தாலே தெரியும். சரி, இதில் என்னென்ன பிரச்சினைகள் இருந்தன?