

ஒரு கலைஞர் தனது துறையில் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்து படைப்பாற்றலுடன் இயங்கிக்கொண்டிருப்பதே மகத்தான சாதனைதான். ஏராளமான சாதனைகளைச் செய்துவிட்டு, தனது லட்சியக் கனவை நிறைவேற்றும் வகையில் ஓர் அசாத்திய சாதனையையும் செய்திருக்கும் இசைக் கலைஞரான இளையராஜாவுக்குத் தமிழக அரசே பாராட்டு விழா நடத்தியிருப்பது மிகமிகப் பொருத்தமானது. உலகின் எந்த இசைக் கலைஞருக்கும் ஓர் அரசு பாராட்டு விழா நடத்தியதில்லை என்று இளையராஜா தனது ஏற்புரையில் குறிப்பிட்டார்.
அது அவ்வளவு துல்லியமானது என்று சொல்லிவிட முடியாது. கலைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு இப்படிப் பேசுவது இயல்புதானே! உண்மையில், அசாமைச் சேர்ந்த, மறைந்த இசைக் கலைஞர் புபேன் ஹஸாரிகாவின் 100ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை அம்மாநில அரசே அண்மையில் முன்னெடுத்திருக்கிறது. பிரதமர் மோடிகூட இதில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.