சிறப்புக் கட்டுரைகள்
வரலாறு என்னும் தேடல் | காலத்தின் தூரிகை 1
ஆதியிலே கதை இருந்தது. கடவுள் படைத்ததாகச் சொல்லும் அனைத்தையும், கடவுள் உள்பட அதுவே படைத்தது. எனவே, தவிர்க்கவியலாதபடிக்குக் கதையின் சாயல் இந்த உலகிலுள்ள அனைத்தின்மீதும், அனைவரின்மீதும் இன்றுவரை அழுத்தமாகப் படிந்து கிடக்கிறது. வரலாற்றுக்கும் இது பொருந்தும். தொடக்கத்தில் கதைகளின் தொகுப்பே வரலாறாக இருந்தது. உண்மையின் இன்னொரு பெயராக அல்லது இன்னொரு வடிவமாகக் கதை திகழ்ந்தது.
செவிவழிக் கதைகள் மூலமே கடந்த காலத்தை நாம் அறிந்துகொண்டோம். நினைவுகள் இல்லாத குறையைக் கதைகளே பூர்த்தி செய்தன. வரலாறும் கற்பனையும் பிரிக்க முடியாதபடிக்கு ஒன்றுகலந்தன. நெருக்கம்தான் குறைந்திருக்கிறதே தவிர, இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே இப்போதும் வாழ்ந்து வருகின்றன.
