

அமைதியாக வாழவே ஒவ்வொரு குடும்பமும் ஆசைப்படுகின்றது. அமைதி என்பதன் வரையறை என்ன? புறச்சூழலின் அமைதியா அல்லது அகத்தின் அமைதியா? எதிலும் பட்டுக்கொள்ளாமல் ஒதுங்கி வாழ்வதுதான் அமைதியா? குடும்பச் சண்டையும் வாக்குவாதங்களும் உணவில் உப்பைப் போலத் தேவையானதே. உப்பின் அளவு அதிகமாகி விடக் கூடாது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறைவான வீடுகள் உள்ள இயற்கைச் சூழலுக்குச் செல்லும் போது அமைதியை நன்றாக உணர முடிகிறது. வீடுகள் அதிகமாவது தான் அமைதியின்மையின் ஊற்றுகண் போலும். அமைதி எல்லா நேரத்திலும் விரும்பக்கூடியதில்லை. சிலவகை அமைதியை நம்மால் தாங்க முடியாது. அமானுஷ்ய அமைதி கலைந்துவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அமைதி நம்மை விழுங்கிவிட முயலும்போது குரல்கள் தரும் சந்தோஷத்திற்கு ஏங்குகிறோம். கோடை விடுமுறையில் பாட்டி வீட்டிற்குச் செல்லும் போது விளையாட்டு மைதானம் போல வீட்டில் எப்போதும் உற்சாகம் கொப்பளித்தபடியே இருக்கும். இரவில் படுக்கையில் படுத்தபடியே கூட யாராவது பேசிக் கொண்டிருப்பார்கள்; சிரிப்பார்கள்.