

உலகளாவிய அளவில் பின்நவீனத்துவம் 1960-70களில் பேசுபொருளாக உருவானது. குறிப்பாக, ‘போஸ்ட்மாடர்னிசம்’ என்ற சொல் 1870-ல் கலையில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. எனினும், 1950-60களில், இலக்கியம், கலை, தத்துவம் ஆகிய துறைகளில் இயக்கமாக உருப்பெற்றது. தத்துவத்தில், 1979-ல் வெளியான பிரான்ஸைச் சேர்ந்த பிரான்சுவா லியோத்தார்தின் ‘பின்நவீன நிலை’ என்ற நூலுக்குப் பிறகு, இச்சொல் வலுவாக நிலைபெறத் தொடங்கியது. மேற்கில் பேசத் துவங்கிய காலத்திலிருந்து சுமார் 20 ஆண்டுகளுக்குள் தமிழ்ச் சூழலில் பின்நவீனத்துவம் பேசுபொருளாக மாறியது.
உலகமயமும், தாராளவாத முதலாளியமும் இந்திய ஒன்றியத்தில் பரவலாகியபோது, தமிழகத்தில் முதலில் இலக்கியத் தளத்தில் பின்நவீனத்துவம் குறித்த அறிமுகங்கள் நிகழ்ந்தன. கடந்த 1982ல் வெளிவந்த தமிழவனின் ‘ஸ்ட்ரக்சுரலிஸம்’ என்ற நூல் அதற்கான தளத்தைக் கட்டமைத்தது. தமிழ் இலக்கியத் தளத்தில் அதுவரை கோலோச்சி வந்த பழமைவாதமும், நவீனத்துவமும் கலந்து ஒருவகை ‘கலப்பின நவீனத்துவம்’ (Hybrid Modernity) கேள்விக்கு உட்படுத்தப்பட்டது.