

பொறியாளர்கள், நவீன உலகின் சிற்பிகள். அறிவியல் / தொழில்நுட்பங்களை வாழ்க்கைக்கான கருவிகளாகவும் சேவைகளாகவும் மாற்றும் பயன்பாட்டு அறிவியலாளர்கள். ஆக்கத்திறனும் நடைமுறை அனுபவங்களும் கொண்ட அவர்கள் சமூகத்துடன் நெருக்கமாக வேலை செய்கிறார்கள். அந்த வகையில், அறிவியல் தமிழை வளர்க்க இயன்ற அளவு பங்களிக்க வேண்டிய சமூகக் கடமை பொறியாளர்களுக்கு உண்டு.
அறிவியல் தமிழ் என்றால் என்ன? - துறை சார்ந்த கருத்துகள், விளக்கங்கள், அனுபவங்கள், கண்டுபிடிப்புகள் போன்றவற்றால் கிடைத்த அறிவை அறிவியல் மொழியில் விளக்குவது அறிவியல் தமிழ். இன்றும் பயன்பாட்டில் இருக்கும் கோயில்கள், கோட்டைகள் போன்றவை நம் முன்னோர்களிடம் தொழில்நுட்பத் திறன், ஆற்றல் ஆகியவை இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. தேவையான வடிவமைப்பு, நடைமுறைப்படுத்தல் தமிழில்தான் செய்யப்பட்டிருக்க வேண்டும்.