

அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
தொடரின் இறுதிப் பகுதியான இந்தக் கட்டுரை, மானுடவியல் தணிக்கையாக (anthropological audit) அமைவதுதான் பொருத்தம். அப்படிச் செய்ய உதவக்கூடியது மானுடச் செயல் தேர்வுகள் குறித்த அறவியல் சிந்தனைதான் என்பதால், அன்றாடமும் அறமும் குறித்த சிந்தனையாக இதனை அமைத்துக்கொள்ளலாம். இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் கால் பகுதி முடிந்த நிலையில், மானுடம் இன்னொரு பாதை விளிம்பில் நிற்பதாகவே காட்சியளிக்கிறது.