விளையாட்டில் தலையிடாத முடிவு சரியானதே!

விளையாட்டில் தலையிடாத முடிவு சரியானதே!
Updated on
2 min read

துபாயில் வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு தடை விதிக்கும்படி கேட்டு தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது சரியான முடிவாகும்.

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல், அதைத் தொடர்ந்து நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை ஆகியவற்றை சுட்டிக்காட்டி சட்ட மாணவர்கள் 4 பேர் தொடர்ந்த மனுவில், ராணுவத்தின் தியாகத்தை அவமதிக்கும் வகையில் கிரிக்கெட் போட்டி நடப்பதாகவும், இதன்மூலம் ராணுவத்தினர் ஊக்கமிழக்கும் நிலை ஏற்படும் என்று கூறியதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துள்ளது.

விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டுமே தவிர, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடை பெறும் சண்டையைப் போன்று பார்ப்பது தவறான கண்ணோட்டம். இதுபோன்ற கண்ணோட்டத்தை உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பது பாராட்டுக்குரியது. விளையாட்டுப் போட்டிகளை அரசியல் நகர்வுகளுடன் தொடர்புபடுத்துவது தவறான அணுகுமுறையாகும்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தைப் பொறுத்தமட்டில், மத்திய அரசு நிர்ணயித்துள்ள கொள்கை முடிவையே பின்பற்றி வருகிறது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு, தீவிர வாதிகளுக்கு தங்கள் ராணுவத்தின் மூலம் பயிற்சி அளித்து இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கும் நாடு என்ற முறையில் பாகிஸ்தான் மீது இந்தியா சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உலக நாடுகள் மத்தியில் தீவிரவாத நடவடிக்கைகளை கைவிடுவதற்கான நெருக்கடிகளை அளித்து வருகிறது.

இவை அனைத்தும் அரசாங்கம் சார்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள். இருந்தாலும், விளையாட்டுப் போட்டிகள் என்று வரும்போது சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகள், உள்நாட்டில் நடக்கும் போட்டிகள் என்று பலவகை உண்டு.

இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி விளையாட்டுப் போட்டித் தொடர் எதையும் அனுமதிப்பதில்லை. அதேநேரம், சர்வதேச போட்டிகள் என்றால், பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் சூழ்நிலை வரும்போது விளையாடலாம் என்பதே இந்திய அரசின் நிலைப்பாடாகும். மத்திய அரசின் இந்த கொள்கை சரியான அணுகுமுறையே. இதில் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைப்பாடும் உண்டு; நமது இளைஞர்கள் சர்வதேச போட்டிகளை புறக்கணிப்பதன் மூலம் பாதிப்புக்கு ஆளாகும் நிலையை தவிர்க்கும் நிலைப்பாடும் அடங்கியுள்ளது.

அந்த வகையில் துபாயில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டி சர்வதேச போட்டி என்ற முறையில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுவதில் தவறில்லை. மத்திய அரசால் வகுக்கப்பட்டுள்ள கொள்கை முடிவின்படியே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பாகிஸ்தான் அணியுடன் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது.

இவை தவிர, விளையாட்டு ரசிகர்களைப் பொறுத்தமட்டில், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி வேறு எந்தப் போட்டியைக் காட்டிலும் சுவாரஸ்யம் நிறைந்ததாக காணப்படும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருப்பார்கள். விளையாட்டு ரசிகர்களாக அந்தப் போட்டியை கண்டு ரசிக்க வேண்டுமே தவிர, அதில் அரசியலையும், மனமாச்சர்யங்களையும் இணைத்து எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமற்றது. இந்த விஷயங்களை நீதிமன்றமும் சரியாக புரிந்துகொண்டு போட்டி நடக்க வழிவிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in