

பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, திடநிலையை அடைந்த பிறகு கண்டங்கள் பிரியாமல் ஒரே நிலமாக இருந்தது. அதன் பிறகு, 22.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கண்டத் தட்டுகள் மெல்ல மெல்ல நகர்ந்து, பல்வேறு திசையில், பல்வேறு வேகத்தில் நகர்ந்தன. அப்போது கடலில் உள்ள நீர், கண்டத் தட்டுகள் இடையில் புகுந்து, தட்டுகளின் உராய்வைத் தடுத்து 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை நிலப்பரப்பாக ஒன்றோடொன்று ஒட்டிச் சுருங்கி இருந்ததை ஏழு கண்டங்களாகப் பிரித்தது. இவற்றின் இடையில் கடல்கள் உருவாகின.
ஒன்றாக ஒட்டியிருந்த ஏழு கண்டங்களைப் பூமியின் உள்பகுதியில் நகர்த்தி, நீர் அவற்றைப் பிரித்ததுதான் பூமியின் உள்ளேயும், புறத்தோற்றத்தை மாற்றிய முதல் நிகழ்வு. இச்சமயத்தில், நீரின் நகர்த்தும் செயலானது, இந்தியக் கண்டத் தட்டையும் யூரேசியக் கண்டத் தட்டையும் முட்டச் செய்து, டெதிஸ் கடலாக இருந்த பகுதியை இமயமலையாக உயர்த்தியது. இம்மலையில் நீர் வளமிக்க 10 ஆறுகளைப் புதிதாக உற்பத்தி செய்து, இம்மலையைச் சுற்றிய 16 நாடுகளின் நீர் வளத்தைப் பெருக்கியது.