

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வர்த்தக வரி விதித்துள்ளதன் மூலம், அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்து வந்த உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜவுளி, மீன், மர சாமான்கள் உள்ளிட்ட வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பது உண்மை என்றாலும் அதற்காக அமெரிக்காவிடம் இந்தியா அடிபணியும் என்று அந்நாடு எதிர்பார்ப்பது நகைப்புக்குரியது.
வர்த்தகத் தடையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகளும் ஏற்றுமதியாளர்களும் மாற்றுத் திட்டங்களை ஆலோசித்து வருவது நம்பிக்கையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது. அதேநேரம், சர்வதேச அளவில் இந்தியா மேற்கொண்டு வரும் அணுகுமுறைகள் அமெரிக்காவை யோசிக்க வைத்துள்ளது. சீன அதிபர்ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் சேர்ந்து பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படம் மேற்கத்திய நாடுகள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, செய்வதறியாது முன்னுக்குப் பின் முரணான கருத்துகளை தெரிவிக்கும் நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது.
அதுமட்டுமின்றி, ரஷ்யா – உக்ரைன் போரை அதிபர் பதவியேற்ற உடனே நிறுத்தி விடுவேன் என்று மார்தட்டி வந்த டொனால்டு ட்ரம்ப், பல்வேறு முயற்சிகள் எடுத்தும் போரை நிறுத்த முடியாமல் பின்வாங்கியுள்ளார். இந்த நிலையில், ரஷ்யா, உக்ரைன் இரண்டு நாடுகளிடமும் சமநிலையில் நெருக்கம் காட்டிவரும் இந்தியா மூலம் போரை நிறுத்த முடியுமா? என்ற முயற்சியில் உலக நாடுகள் ஈடுபடுவது வரவேற்கத்தக்க நகர்வாகவே அமைந்துள்ளது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன் போன்றோர் ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த இந்தியாவின் உதவியை நாடி வருவது இந்தியாவின் முக்கியத்துவம் உலக நாடுகள் மத்தியில் உயர்ந்து வருவதற்கான அடையாளமாகும்.
இந்த உண்மைகளை எல்லாம் உணராமல், ஒரு சில தலைவர்கள் இந்தியாவுக்கு எதிராக பேசி வருவது இந்தியாவின் தற்சார்பு தன்மையை புரிந்து கொள்ளாத அவர்களது அறியாமையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இந்தியா இன்னும் 2 மாதங்களில் அமெரிக்காவிடம் மன்னிப்பு கேட்டு பேச்சுவார்த்தைக்கு வரும் என்று அமெரிக்க செயலாளர் ஒருவர் பேசியிருக்கிறார்.
கடந்த 74-ம் ஆண்டு இந்தியா முதல் முறையாக அணு ஆயுத சோதனை நடத்தியபோது, இந்தியாவுக்கு எதிராக கனடா வர்த்தக தடை விதித்தது. 98-ம் ஆண்டு அமெரிக்கா வர்த்தக தடை விதித்து மறு ஆண்டே தானாக முன்வந்து நீக்கிக் கொண்டது. 98 முதல் 2001 வரை ஜப்பான் தடை விதித்தது. அப்போது 14 நாடுகள் இந்தியா மீது வர்த்தக தடை விதித்தன. 92 முதல் 2011 வரை இஸ்ரோ மீது அமெரிக்கா தடை விதித்தது.
எதற்கும் இந்தியா அடிபணியவில்லை. அவர்களாகவே தடைகளை அகற்றிய வரலாறு உண்டு. இந்த முறையும் வர்த்தக வரி சவால்களை சமாளித்து இந்தியா உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.