

மகன் கற்றோர் அவையில் முந்தியிருக்க தந்தை உதவ வேண்டுமென்று திருவள்ளுவரும், ‘சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனப் பொன்முடியாரும் (புறநானூறு), ஆசிரியர் - மாணவர் இலக்கணங்களை நன்னூலில் பவணந்தியும் எழுதியிருப்பவை பழங்காலத்திலேயே கல்வியையும் ஆசிரியரையும் தமிழர்கள் போற்றியதற்குச் சான்றுகள்.
படிநிலைச் சாதியக் கட்டமைப்பில் குலத் தொழில்களைப் பெற்றோரும் உற்றாரும், எழுத்தறிவை ஆசான்களும் தனித்தனியாகக் கற்பித்துவந்தனர். அதற்கு மாற்றாக முதலாளித்துவ அரசுக்கும், சமூகத்துக்கும் தேவைப்படும் மனித வளங்கள் நவீனக் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களால் உருவாக்கப்படும் நிலை உருவானதால், அது பொது விவாதத்துக்கு உள்ளானது.