

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆரோவில்லின் மிகப்பெரிய இயற்கைப் பண்ணையான அன்னபூர்ணா, சென்னை ஐஐடியின் ‘நிலைத்தன்மை வளாகம்’ (Sustainability Centre) உருவாக்கும் பணிக்காக அழிக்கப்படவிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. மத்திய அரசு சார்பில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசும் அரசியல் தலைவர்களும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
இந்த சர்வதேச நகரம் 1968இல் 124 நாடுகளின் பங்கேற்புடன் தொடங்கப்பட்டு, பல்வேறு பண்பாடுகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், ஆன்மிக வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழல் தேவைகளைப் புரிந்துகொள்வதற்குமான ஓர் அற்புதமான திட்டம். சுதந்திரம், சுய விசாரணை, உணர்தல், பன்முகத்தன்மை ஆகியவையே இதன் அடிப்படை அம்சங்கள்.