

ஆண்டின் முதல் நீரிடியை (Cloudburst) கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 30) சென்னை எதிர்கொண்டதாகக் கூறுகிறது சென்னை வானிலை ஆய்வு மையம். குறிப்பாக மணலி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த நீரிடி மழை பொழிந்தது. தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டின் வட கடற்கரை ஓரப் பகுதிகளில் இன்னும் செயல்திறனுடன் இருப்பதே இதற்குக் காரணம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
மணலியில் சனிக்கிழமை இரவு 10-11 மணிக்குள் 106 மி.மீ. மழையும், 11 மணியில் இருந்து நள்ளிரவு வரை 126 மி.மீ. மழையும் பெய்துள்ளது. இதன் காரணமாகப் பல விமானங்கள் பெங்களூரு விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டன. மக்கள் வேலைக்குச் செல்லாத இரவு நேரத்தில் மழை பெய்ததால் போக்குவரத்து நெருக்கடியோ, மற்ற பிரச்சினைகளோ பெரிதாக ஏற்படவில்லை. அதேநேரம், எல்லா நீரிடியும் இப்படி இரவில்தான் வரும் என்று கூற முடியாது.