மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிப்பது அவசியம்!

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில் திறந்து கிடந்த மழைநீர் கால்வாயில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அந்த வழியாக நடந்து சென்றபோது மழைநீர் கால்வாய் திறந்து கிடப்பதை கவனிக்காமல் உள்ளே விழுந்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இச்சம்பவத்தை அறிந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், மழைநீர் கால்வாய் நீண்டகாலமாக மூடப்படாமல் இருப்பது குறித்தும், அப்பகுதியில் மின்விளக்குகள் சரியாக எரியாமல் இருப்பது குறித்தும் சென்னை மாநகராட்சி மற்றும் மின்சாரத் துறையினருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். அரசு அமைப்புகள் எந்த அளவுக்கு அலட்சியமாக நடந்து கொள்கின்றன என்பதற்கு உதாரணமாக இந்த அலட்சியப் போக்கு அமைந்துள்ளது.

பொதுவாகவே, சாலைகளில் மழைநீர் பணிகள் உள்ளிட்ட வேலைகள் நடக்கும்போது, அதில் பாதுகாப்பு அம்சங்களை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் ஒப்பந்ததாரர்கள் அரைகுறையாக பணிகளை செய்வதும், அதை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருப்பதும் வாடிக்கையான நிகழ்வாகவே இருக்கிறது. இத்தகைய கவனக்குறைவு சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அன்றாட காட்சியாகவே உள்ளது.

குறிப்பாக, பருவமழை தொடங்கவுள்ள நிலையில், இதுபோல சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாமல் இருக்கும் இடங்கள் குறித்து அதிகாரிகள் கூடுதல் கவனம் எடுத்து செயல்பட வேண்டும். பருவமழைக்கு முன்னதாகவே மழைநீர் கால்வாய் மற்றும் சாலைகளை தோண்டும் பணிகளை முடித்துவிட வேண்டும் அரசு சார்பில் அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகின்றன. ஆனாலும், அவை நடைமுறையில் செயல்பாட்டுக்கு வராமல் எப்போதும் போல் அலட்சியம் காட்டப்படுவது அரசுக்கு கெட்ட பெயரையே ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

சென்னையில் நடந்த உயிரிழப்பு சம்பவத்தைப் போல் தமிழகத்தில் வேறெங்கும் நடக்காமல் இருக்க, தற்போது நடைபெற்று வரும் பணிகளில் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைத்து பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க வேண்டும். வார்டு வாரியாக மூடப்படாத கால்வாய்கள், சாலைகளில் விபத்தை ஏற்படுத்தும் பள்ளங்களை சரிசெய்யும் பணிகளிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும்.

அதேசமயம், சென்னையில் நடந்துள்ள உயிரிழப்பில் அந்தப் பெண் சாலையில் மூடப்படாத கால்வாயை கவனிக்காமல் இருந்ததற்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும். தெருவிளக்கு எரியாததால் கால்வாய் திறந்து கிடந்ததை கவனிக்கவில்லையா? அல்லது அலைபேசியை பயன்படுத்திக் கொண்டு சாலையை கவனிக்காமல் கவனக்குறைவாக சென்றாரா? என்பதையும் கண்டறிய வேண்டும்.

அலைபேசியின் வருகைக்குப் பிறகு, சாலையில் நடந்து செல்வோர், சாலையை கடப்போர், ரயில் தண்டவாளத்தை கடப்போர் பலர் கவனத்தை முழுக்க அலைபேசியில் வைத்துக் கொண்டு பாதுகாப்பு பற்றி கவலைப்படாமல் செயல்படும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு சாலைகளில் நடக்கும்போதும், தண்டவாளத்தை கடக்கும்போதும் அலைபேசி பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in