Published : 22 Jul 2018 10:31 am

Updated : 22 Jul 2018 10:31 am

 

Published : 22 Jul 2018 10:31 AM
Last Updated : 22 Jul 2018 10:31 AM

“தமிழக மக்கள் எரிச்சலைத் தேர்தலில்  காட்டுவார்கள்!”- விஜய் சேதுபதி பேட்டி

அரசியல், சமூகப் பிரச்சினை, போராட்டம் எதுவாக இருந்தாலும் முகம் காட்டுவதிலும், கருத்துச் சொல்வதிலும் முன்வரிசையில் நிற்கிறார் விஜய் சேதுபதி. ‘காமதேனு’ இதழுக்காக சினிமாவைத் தாண்டி சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பியபோதும், தடுமாற்றமில்லாமல் பதிலளித்தார் விஜய் சேதுபதி.

குடும்பப் பின்னணி குறித்து பேச மறுத்த நீங்கள் இப்போது உங்கள் குழந்தைகளுடனான புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிடுகிறீர்கள். ஏன் இந்த மாற்றம்?


என் மனைவியிடம் போட்டோ போடாதே என்றால் கேட்க மாட்டேங்கிறாங்க. குழந்தைகள் படத்தை வாட்ஸ்அப் ப்ரொஃபைல் புகைப்படமாக வைத்துக்கொள்கிறார். ஊரெல்லாம் அவர்களுடைய புகைப்படம் பரவிவிட்டது. நான் என்ன பண்ணினாலும் என் குழந்தைகளின் மனநிலையை எப்படிப் பாதுகாப்பது என்ற பக்குவம் இருப்பதாக நினைக்கிறேன். ஒரு அப்பாவாக அதில் எனக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது. ‘எனது பெயரும், புகழும் எனது இன்சியலில் இருக்கும் எங்கப்பாவுக்குச் சொந்தம். நான் சம்பாதிக்கும் பணம் மட்டுமே உங்களுக்குச் சொந்தம்’ என்று குழந்தைகளிடம் சொல்கிறேன். உங்கப்பா நடிகர் என்று சொல்லிக்கொள்ள உங்களுக்கு எந்த உரிமையுமில்லை என்று சொல்லித்தான் அவர்களை வளர்க்கிறேன். என் குழந்தைகளும் அதைப் புரிந்துகொண்டுள்ளார்கள் என்றும் நம்புகிறேன்.

அருண்குமார் இயக்கத்தில் உங்கள் மகன் சூர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறீர்கள். அவரை நடிகனாக்க வேண்டும் என்று விருப்பமா..?

எந்தச் சூழ்நிலையிலும் வாழ்க்கை சார்ந்த கட்டாயத்தில் குழந்தைகளைத் தள்ள மாட்டேன். ‘அப்பா உன்னிடம் சொல்வதை எல்லாம் சரி என்று நம்பாதே. நான் உன்னிடம் சொல்வது என் அனுபவம். அது சரியா, தவறா என்று தேர்ந்தெடுப்பது உன் புத்தி’ என்று அடிக்கடி சொல்வேன். நீ தவறான ஒன்றைத் தேர்ந்தெடுத்தாலும் அப்பா வருத்தப்பட மாட்டேன். தவறு பண்ணினால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். ஆகையால் எதுவுமே இங்கு தவறில்லை என்று சொல்லித்தான் வளர்க்கிறேன். என் அனுபவத்தை வைத்து, குழந்தைகளைப் பயமுறுத்த நான் தயாராக இல்லை. அவங்க அவங்களோட அனுபவத்தில் கற்றுக்கொள்வது மட்டுமே சிறந்தது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ட்வீட் செய்திருந்தீர்கள். அச்சம்பவம் குறித்து உங்கள் கருத்து?

ஏற்றுக்கொள்ளவே முடியாது. மறக்கவோ, மன்னிக்கவோ முடியாதது. சிலர் காவல் துறை மீது பழி சொல்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. மேலே இருந்து உத்தரவு வராமல், எதுவுமே நடக்காது என்று நம்புகிறேன். என் சொந்த ஊரில் நிலம், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால்கூட நான் பேசாமல் இருக்கணுமாம். அப்படித்தான் இங்கே நிர்பந்திக்கிறார்கள். இதைக் கேட்டால் நாங்கள் உத்தரவு கொடுக்கவில்லை, எங்களை ஏன் கேட்கிறாய் என்கிறார்கள். ஆட்சியில் இருப்பவர்களைக் கேட்காமல், வேறு யாரைக் கேட்பது எனத் தெரியவில்லை. பழிபோடும் அரசியல் மூலமாக மக்களின் மூளையை மழுங்கடிப்பது இங்கு ரொம்ப காலமாக நடக்கிறது. இதற்கெல்லாம் ஒரு தீர்வு நிகழணும்னு ஆசைப்படுறேன். என் மொழியும், மக்களும் காப்பாற்றப்படணும். அது நடக்கும்.

அடுத்து, 8 வழிச்சாலை பிரச்சினையும் உருவெடுத்திருக்கிறதே?

தமிழகத்தைப் பாதித்த பல சமூக விஷயங்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறேன். இப்பிரச்சினையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலவில்லை. ஒரு தரப்பு எதிர்க்கிறது, ஒரு தரப்பு வேண்டும் என்கிறது. எனக்கு இது குறித்த புரிதல் வந்தவுடன் பதில் சொல்கிறேன். அதே வேளையில் நிலத்தை, வீட்டை இழப்பவர்களின் போட்டோக்களைப் பார்க்கிறேன். வருத்தமாக இருக்கிறது. அனைத்துக்கும் காலம் சரியான பதில் சொல்லும்.

ஜி.எஸ்.டி, தமிழக அரசின் கேளிக்கை வரி என எல்லாம் போகத்தான் தற்போது படங்களின் வசூல் வருகிறது. ஆனால், தமிழக அரசு மானியம் உள்ளிட்ட எந்தவொரு விஷயங்களையுமே செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்?

அய்யா.. எங்களுக்குப் பிரச்சினை என்று சொல்றோம். என்ன பிரச்சினை என்று கேட்கிறீங்க. இதுதான் எனச் சொல்றோம். அப்படியா என்று திரும்பவும் அதே பிரச்சினையைக் கொடுக்கிறீர்கள். அல்லது பிரச்சினையை இன்னும் அதிகமாக்குகிறீர்கள். இது திட்டமிட்டு நடத்தப்படுகிறது. இதற்கு நான் என்ன பதில் சொல்றது. அடுக்கடுக்கான பிரச்சினைகளைச் சமாளித்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். யாராவது நம்முடைய பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள மாட்டார்களா என்ற ஏக்கம் மட்டுமே மிச்சமிருக்கிறது.

தற்போது தமிழக அரசியல் சூழல் குறித்து...

தமிழகத்தில் ஒரு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. ஒரு தலைமைக்கான தேவை, வெற்றிடம் ஏற்பட்டு இருப்பது உண்மைதான். மக்கள் இதுவரை திமுக, அதிமுக என இரண்டு ஆட்சிகளை மாறி மாறி பார்த்துவிட்டார்கள். ஆனால், முன் எப்போதும் இப்போது இருப்பதுபோல பாதுகாப்பில்லாத சூழல் இல்லை. இப்போது மக்கள் மனது வேறு தலைமையைத் தேடுகிறது. காலம் அதைச் சரி செய்யும் என்று நம்புகிறேன். தற்போதுள்ள அரசியல் சூழலால் மக்களிடம் ஒரு எரிச்சல் இருக்கிறது. அது தேர்தலில் ஓட்டு போடும்போது வெளிப்படும். பொறுத்திருந்து பாருங்கள்.

உங்களுக்கும் அரசியல் ஆசை இருக்கிறது போல தெரிகிறதே?

நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறில்லை என்பது என் கருத்து. சமூக அக்கறை கொண்ட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதற்காக நீ வருவியா என்றால் வர மாட்டேன். எனக்கு அது குறித்த அறிவில்லை. ஆனால், யார் அரசியலுக்கு வந்தாலும் சாதியை, அது சம்பந்தப்பட்ட அரசியலை ஒழிக்க வேண்டும். சாதி மட்டுமே சமூகத்தில் உள்ள அனைத்து ஏற்றத்தாழ்வுகளுக்கும் காரணம் என்பதை மட்டும் அழுத்தமாகச் சொல்வேன்.

படங்கள்: எல்.சீனிவாசன், தீரன்


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author