Published : 25 Aug 2014 12:00 AM
Last Updated : 25 Aug 2014 12:00 AM

நியமன விளையாட்டு சொல்வதென்ன?

நீதித்துறையைச் சீர்திருத்துவதற்கான நல்வாய்ப்பை அரசு வேண்டுமென்றே தவறவிட்டிருக்கிறது!

முதல் உலகப் போரில் பிரான்ஸை வழிநடத்திய பிரஞ்சு பிரதமர் கிளமென்சோ இப்படிச் சொன்னார்: “ராணுவத் தளபதிகளிடம் மட்டும் விட்டுவிட முடியாத அளவுக்கு முக்கியமான விவகாரம் போர்.” இதைப் போலவே நீதிபதிகள் வசம் மட்டுமே விட்டுவிட முடியாத அளவுக்கு நீதிபதிகள் நியமன விவகாரம் முக்கியமானது என்பது நிரூபணமாகியிருக்கிறது. அண்மையில் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட தேசிய நீதித் துறை நியமன ஆணைய மசோதா இந்த நிலையை சரிசெய்ய எடுக்கப்பட்ட முயற்சி. ஆனால், முந்தைய முறையின் (கொலீஜியம்) மிக முக்கியமான குறைபாடுகள் எதையும் இந்த மசோதா களையவில்லை. மாறாக, நீதித் துறையும் செயலாக்கத் துறையும் அதிகாரத்தைச் சமமாகப் பங்கிட்டுக்கொள்ள மட்டுமே இந்த மசோதா வழிவகுத்திருக்கிறது.

1950-ல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டப்படி உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்குமான நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து குடியரசுத் தலைவர் நியமிப்பார். மத்திய அமைச்சரவையின் ஆலோசனையின்படி நடக்க வேண்டியவர் குடியரசுத் தலைவர் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆக, உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் இருப்பது செயலாக்கத் துறையிடமே. 1973 வரை – அதாவது - ‘‘இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா'' என்ற எதேச்சாதிகார நிலை தோன்றும்வரை இந்த நடைமுறைக்குப் பிரச்சினை ஏதும் வரவில்லை.

ஆளும் கட்சியின் சித்தாந்தத்துக்கு விசுவாசமான வர்களே நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள் என்பது இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் உருவான அவலம். ஒருவர் நீதிபதியாகச் சட்டத்தைத் தெரிந்து வைத்திருப்பதைவிட சட்ட அமைச்சரைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்று கிண்டலாகச் சொல் லப்படும் நிலை அப்போதுதான் உருவானது. 1992-ல் நடந்த ஒரு வழக்கில், காலம்சென்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெ.எஸ். வர்மா தலைமையிலான அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தின் 124-வது பிரிவில் இருக்கும் ‘கலந்தாலோசித்து' என்ற சொல்லுக்கு ‘ஒப் புதலுடன்' என்ற விளக்கமளித்து அதுவரை நீதிபதி கள் நியமனத்தில் செயலாக்கத் துறைக்கு இருந்த அதிகாரத்தை ஒழித்து அதை நீதித் துறையின் வசம் கொண்டுவந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்று இருந்ததை விரிவுபடுத்தி மேலும் இரண்டு மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலீஜியமானது உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை நியமனம் செய்வது என்பது 1993 முதல் நடைமுறைக்கு வந்தது.

இது இந்திய அரசியலைமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல, மக்களாட்சி தத்துவத்துக்கும்கூட எதிரானது. அநேகமாக உலகின் வேறு எந்த நாட்டிலும் நீதிபதிகளே நீதிபதிகளை நியமிப்பது என்பது கிடையாது. இத் தகைய நிலை தோன்றியதற்குக் காரணம் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் சுயநலத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற நிலை தோன்றியதும், அரசியல் வர்க்கம் மக்களிடையே முற்றிலுமாக மதிப்பிழந்ததுமே.

தெளிவில்லாத வழிமுறைகள்

1998-ல் அதுவரை மூன்று உறுப்பினர்களைக் கொண்டிருந்த கொலீஜியம், தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் என ஐந்து உறுப் பினர்களைக் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது.

கொலீஜியம் முறையில் செயலாக்கத் துறையின் தலையீடு பெரிதும் குறைக்கப்பட்டது உண்மை. ஆனால், நியமனமுறையின் தரம் உயர்ந்தாகச் சொல்ல முடியாது. உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் தகுதிகள் என்னென்ன, அவர்களைத் தெரிவுசெய்வதற்கான வழிமுறைகள் என்னென்ன போன்ற விஷயங்கள் எதிலும் தெளிவில்லை.

எல்லாவற்றையும்விட முக்கியமாக வெளிப்படைத் தன்மை இல்லை. கொலீஜியம் என்பது தேவைப்படும் நேரங்களில் கூடிக் கலையும் சபையாகவே இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சமீப காலமாக வெளிப்படுத்திவரும் சில தகவல்கள் நீதிபதிகள் நியமனத்தில் நடந்து வரும் முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

தோல்வியடைந்த கொலீஜியம்

கொலீஜியம் வருவதற்குக் காரணமாக இருந்த தீர்ப்பை அளித்த ஜெ.எஸ். வர்மாவே பின்னர் வருத்தப்பட்டு கொலீஜியம் முறை இப்படித் தோல்வி யுறும் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். ‘அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு' என்ற கண்டுபிடிப்புக்கு அரசியலமைப்பில் எந்த ஆதாரமும் இல்லை என்றபோதிலும் சிறந்த சட்ட நிபுணர்கள் பலராலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டதற்குக் காரணம் இன்றைய அரசியல் வர்க்கத்தால் அரசியலமைப்பின் ஆன்மா சிதைக்கப்படுவதிலிருந்து அது பாதுகாக்கிறது என்பதால்தான். ஒருவேளை, கொலீஜியம் மிகவும் சிறப்பானவர்களையே எப்போதும் நீதிபதிகளாக நியமித்திருக்கும் எனில் அதையும் மக்களும் சட்ட நிபுணர்களும் மனதார ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

இதற்கு மாற்றாக இப்போது நிறைவேற்றப் பட்டிருக்கும் மசோதா எந்த வகையிலும் நிலைமையை மேம்படுத்தப்போவதில்லை. தொடக்கத்தில் செயலாக்கத் துறையிடமிருந்த நீதிபதிகள் நியமன அதிகாரம் பின்னர் நீதித் துறையின் கைகளுக்கு வந்தது. இந்தப் புதிய மசோதாவின்படி அந்த அதிகாரம் இப்போது இரு தரப்பாலும் பங்குபோட்டுகொள்ளப்படும் என்பதைத் தவிர்த்து வேறொன்றும் நடக்கப்போவதில்லை. நீதிபதி களாக நியமிக்கப்பட வேண்டியவர்களின் தகுதிகள் என்னென்ன, அவர்களைத் தெரிவுசெய்வதற்கான வழி

முறைகள் என்னென்ன என்பன எதுவும் இப்போதும் வரையறுக்கப்படவில்லை. அத்துடன் இந்த நியமன முறையிலும் வெளிப்படைத்தன்மை என்பது ஏதுமில்லை.

மேலும் பணிச்சுமை

உச்ச நீதிமன்றத்தில் 31 நீதிபதிகளும், 24 உயர் நீதிமன்றங்களில் சுமார் 800 நீதிபதிகளும் பணி யாற்றுகின்றனர். ஆண்டுதோறும் சுமார் 100 முதல் 200 வரையிலான நீதிபதிகளை நியமிக்க வேண்டியிருக்கிறது. நீதி நிலைநாட்டப்படுவதில் சட்டத்துக்கு இருக்கும் பங்கு எவ்வளவு முக்கியமானதோ, அதைவிட முக்கியமானது அந்தச் சட்டத்தை விளக்கி நீதியளிக்கும் நீதிபதியின் ஆளுமை. இந்தக் கருத்தை மனதில் கொண்டு பார்க்கும்போது நீதிபதிகள் நியமனம் எவ்வளவு தீவிரமான விஷயம் என்பது புரியும். இவ்வளவு சுமை கொண்ட பணியை, ஏற்கெனவே பெரும் பணிச் சுமைகளில் சிக்கியிருக்கும் மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் சட்ட அமைச்சரும் நிறைவேற்றுவது என்பது ஆகாத காரியம். இவர்களும் அவ்வப்போது கூடிக் கலையும் சபையாகவே இருப்பார்கள். பிரசாந்த் பூஷண் கூறியிருப்பதைப் போல, ஓய்வுபெற்ற நீதிபதி களையும் மூத்த வழக்கறிஞர்களையும் கொண்ட ‘தி கமிட்டி ஆன் ஜுடிசியல் அக்கவுன்டபிளிட்டி’ என்ற தன்னார்வ அமைப்பு பரிந்துரைத்திருப்பதைப் போன்ற, பரவலான பிரதிநிதித்துவத்தைக்கொண்ட வெளிப்படையான, தேவையான அளவுக்குப் பணி யாளர்களைக் கொண்ட முழு நேர அமைப்பு மட்டுமே நீதிபதிகள் நியமனத்தை முறையாகச் செய்ய முடியும்.

இவர்கள் கருத்தின்படி ஓய்வுபெற்ற நீதிபதிகள், சட்ட நிபுணர்கள், பொதுவாழ்வில் சிறந்து விளங்குபவர்கள் போன்றோரைக் கொண்டதாக இந்த அமைப்பு இருக்க வேண்டும். அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளையும் கொண்ட குழுவால் பரிந்துரை செய்யப்படும் நபர் இந்த அமைப்பின் (கொலீஜியத்தின்) தலைவராக இருப்பார். அனைத்து உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளையும் கொண்ட குழுவால் பரிதுரைக்கப்படும் ஒருவர், மத்திய அமைச்சரவையால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், மக்களவை சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் எதிர்க்கட்சி தலைவர்கள் குழுவால் பரிந்துரைக்கப்படும் ஒருவர், தேர்தல் ஆணையத்தின் தலைமை அதிகாரி, தலைமை கணக்காளர், மத்திய கண்காணிப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவால் பரிந்துரைக்கப்படும் நபர் என மொத்தம் ஐந்து நபர்களைக் கொண்டதாக இருக்கும். அத்துடன், நீதிபதிகளின் தகுதிகள் மற்றும் நியமன நடைமுறைகள் பற்றி செம்மையான வரையறைகள் கொண்டதாக, முழு நேர மற்றும் முழுமையான வெளிப்படைத் தன்மை கொண்டதாக இந்த அமைப்பு விளங்கும். இத்தகைய ஓர் அமைப்பால் மட்டுமே நீதிபதிகள் நியமனப் பணியை செவ்வனே செய்ய முடியும் என்பது சாமானியருக்கும் புரியக்கூடிய விஷயம்.

ஆனால், இத்தகைய நல்ல அமைப்பு முறை உருவாவதை அரசியல்வாதிகள் மட்டுமல்ல, நீதித் துறையினரும்கூட எந்த அளவுக்கு விரும்புகிறார்கள்? அதிகார துஷ்பிரயோகத்துக்கு வாய்ப்பில்லாத அதிகாரத்தால் என்ன பயன் என்றே நம்முடைய மக்களாட்சியின் மூன்று தூண்களும் நினைக் கின்றனவோ..?

- க. திருநாவுக்கரசு, சமூக - அரசியல் விமர்சகர், தொடர்புக்கு: kthiru1968@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x