

இந்திய திரைத்துறையில் தென்னிந்தியாவின் பங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் தமிழ்த் திரையுலகின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில், சமீபகாலமாக அதிக தோல்விப் படங்கள் வருவதாக வெளிவரும் செய்திகள் வருத்தமளிக்கும் விஷயமாக
அமைந்துள்ளது.
இந்த ஆண்டில் கடந்த 8 மாதங்களில் 175 படங்கள் வெளியாகி இருப்பதாகவும், இதில் 167 படங்கள் தோல்விப் படங்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உருவாகும் படங்களில் 10 சதவீதம் படங்கள்கூட வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்பது எங்கோ தவறு நடக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.
திரைத்துறையை வாழ்வாதாரமாக கொண்டு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள நிலையில், தோல்விப் படங்கள் அதிகமாக வெளிவருவது அத்துறையை நம்பியுள்ளவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குரியதாக மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.
கடந்த 2024-ம் ஆண்டு 234 படங்கள் வெளியானபோதும் தோல்விப் படங்களின் எண்ணிக்கையே அதிகம். இந்தியா முழுக்க வெளிவரும் திரைப்படங்களில் 52 சதவீதம் படங்கள் தென்னிந்தியாவிலிருந்தே வெளியாகின்றன. சுமார் ரூ.15,000 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டித்தரும் துறையாக தென்னிந்திய திரைப்படங்கள் இருந்து வருகின்றன. இதில் தமிழ்த் திரையுலகின் பங்கு ரூ.5,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
தோல்விப் படங்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக அதிக அளவில் வெளிவருவதாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வருத்தப்படுகின்றனர். பணம் முதலீடு செய்பவர்கள் லாபம் ஈட்டும் வகையில் படங்களை உருவாக்கினால் மட்டுமே அது நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்கும். அந்த வகையில் மக்கள் பார்த்து ரசிக்கும் வகையில் படங்களை உருவாக்கும் பொறுப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு அதிகம் உண்டு.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை வெளிவந்த திரைப்படங்களில் மக்களை மகிழ்விக்கும் காட்சிகள் அதிகமாகவும், சமூக கருத்துகள் குறைவாகவும் இருக்கும் வகையில் படங்கள் தயாரிக்கப்பட்டன. சொல்லப்படும் கருத்துகளும் யாருடைய மனதும் புண்படாத வகையில் இலைமறை காயாக சொல்லப்பட்டன. ஆனால், சமீபகாலமாக வெளிவரும் படங்களில் மக்களை மகிழ்விக்கும் காட்சிகள் குறைவாகவும், சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்வது அளவுக்கு அதிகமாக இருப்பதும், கலகத்தை உருவாக்கும் வகையில் காட்சிகள் உருவாக்கப்படுவதும் திரைப்படங்களின் தோல்விக்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது.
திரைப்படங்களை வலுவான கதையம்சங்களுடன் தயாரிக்காமல், பணம் கொடுத்து எழுதப்படும் விமர்சனங்கள், ஆடம்பர விளம்பர வெளியீட்டு நிகழ்ச்சிகளுக்கு அதிகம் செலவழிப்பது, அதன்மூலம் படங்கள் வெற்றி பெறும் என்ற தவறான நம்பிக்கை ஆகியவை தோல்விகளுக்கு காரணமாக அமைகின்றன.
மக்களுக்கு நல்ல கருத்துகளை கொண்டு சேர்ப்பதில் வேறு எந்த ஊடகங்களை விடவும் அதிக சக்தி வாய்ந்த ஊடகமாக திரைப்படங்கள் விளங்கி வரும் நிலையில், அதற்கேற்ப கூடுதல் பொறுப்புடன் பணியாற்ற வேண்டிய அவசியம் திரைத்துறையினருக்கு உருவாகிறது.
தமிழக திரைத்துறையின் வீச்சு இந்தியா முழுக்க பரவியிருப்பதுடன், உலகம் முழுக்க பரவிவரும் காலகட்டத்தில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் முன்னெப்போதையும் விட கூடுதல் பொறுப்புடன் படங்களைத் தயாரித்து பெருமை சேர்ப்பதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.