

‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் மிதந்ததாக வெளிவரும் செய்திகள் கவலையளிக்க கூடியதாகும். அரசுத் துறை சேவைகளை பொதுமக்களின் இல்லங்களுக்கு அருகிலேயே கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது இந்த திட்டம்.
கடந்த ஜூலை முதல் வரும் நவம்பருக்குள் 10,000 முகாம்கள் நடத்தி மக்களிடமிருந்து மனுக்களைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் 13 துறைகள், 43 சேவைகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் 14 துறைகள், 46 சேவைகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின்கீழ், பட்டா மாறுதல், சாதிச் சான்று, முதியோர் உதவித்தொகை, மகளிர் உதவித்தொகை, மருத்துவக் காப்பீடு அட்டை என பல்வேறு முக்கிய சேவைகள் இடம்பெற்றுள்ளன.
இதனால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று ஏராளமான மக்கள் நம்பிக்கையுடன் இந்த முகாம்களுக்குச் சென்று மனுக்களை வழங்கி வருகின்றனர். ஒரு சில இடங்களில் மனுக்களை உரிய ஆவணங்களுடன் ஒப்படைத்த சில தினங்களுக்குள்ளேயே கோரிக்கை நிறைவேறி அவர்களுக்கு உரிய உதவிகள் போய்ச் சேர்ந்து விடுவதால் திட்டத்துக்கு தமிழகமெங்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் வைகை ஆற்றில் மூட்டை மூட்டையாக மிதக்கின்றன என்று வெளிவந்துள்ள செய்தி இத்திட்டத்தின் மீதும், அரசின் மீதும் மக்களுக்கு எதிர்மறையான எண்ணம் உருவாக காரணமாக அமைந்துள்ளது.
“பட்டா மாறுதல் கோரி பெறப்பட்டதில் தீர்வு காணப்பட்ட மனுக்களின் 6 நகல்கள் மற்றும் வட்டாட்சியர் மூலம் பெறப்பட்ட 7 மனுக்கள் ஆற்றின் கரையோரம் மிதந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பது ஏற்புடையதாக இல்லை.
முதல்வரின் நேரடி கவனத்துக்கு உட்பட்ட சிறப்பு திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் இந்த அளவுக்கு அலட்சியமாக ஆற்றில் வீசப்பட்டிருப்பது அரசு அலுவலர்களின் பொறுப்பற்ற செயலுக்கு சான்றாக அமைந்துள்ளது.
ஒருவேளை அரசுக்கு வேண்டாதவர்கள், கெட்ட நோக்கத்துடன் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டார்களா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்துவது அவசியம். உண்மையில் அரசு அலுவலர்கள் அலட்சியமாக மனுக்களை ஆற்றில் வீசியிருந்தால் அவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். விஷமிகளின் வேலையாக இருந்தால் அவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கும் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்டங்களைப் பெறுவதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வரும் நிலையில், அரசின் மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் அறவே நடக்காமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உயரதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.