

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள வரியிலிருந்து கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்கா அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 50 சதவீத வரி செலுத்த வேண்டிய நெருக்கடி இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்பட்டிருப்பது வளர்ந்துவரும் இந்திய பொருளாதாரத்துக்கு சவாலான விஷயமாகவே அமைந்துள்ளது.
கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்திய பணம், ரஷ்யா தொடர்ந்து போர் நடத்த உதவுகிறது என்ற அமெரிக்காவின் வாதம் ஏற்புடையதல்ல. பல நாடுகள் ரஷ்யாவிடம் வர்த்தக உறவு மேற்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவை குறிவைத்து அமெரிக்கா வரி விதிப்பது, ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்துவதற்கான நெருக்கடி என்ற வெளித்தோற்றத்தைக் காட்டிலும், உலக அளவில் பொருளாதார சக்தியாக வளர்ந்துவரும் இந்தியாவுக்கு அமெரிக்கா போடும் முட்டுக்கட்டையாகவே பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் அமலுக்கு வரப் போவதாக தெரிவித்துள்ள இந்த வரிவிதிப்பால் இந்தியாவின் மிக முக்கிய துறைகளான ஜவுளி, தங்க நகை, இறால், தரைவிரிப்பு, மர சாமான்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி சந்தை 30 சதவீதம் வரை பாதிக்கப்படும் என்று கூறப்படுவது கவலையளிக்கும் விஷயமாகும்.
பாதிப்புகள் ஏற்பட்டாலும் இந்தியாவின் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், வர்த்தகர்கள், சிறுதொழில் நடத்துவோரின் நலனை என்ன விலை கொடுத்தாவது பாதுகாப்போம் என்று பிரதமர் மோடி பேசியிருப்பது ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். அமெரிக்க கூடுதல் வரிவிதிப்பு குறித்து பிரதமர் அலுவலகம் சார்பில் சிறப்பு கூட்டம் நடத்தி, பாதிப்புகளை சரிசெய்யதேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்திருப்பதும் சரியான பாதையில் எடுக்கப்படும் முக்கிய நகர்வாகும்.
எந்தெந்த துறைகள் பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கிறதோ அந்த துறைகளில் உள்ளூர் தேவைகள் அதிகரிக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தால், ஏற்றுமதி குறைவதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை சரிக்கட்ட முடியும் என்று நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்து வருகின்றனர். இந்த கோணத்தில் உரிய நடவடிக்கைகளை எடுத்தால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைக்க முடியும்.
இதுதவிர, இந்தியா மீது அமெரிக்கா வரிவிதிப்பதன் மூலம் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப சீனா, தைவான் போன்ற நாடுகள் காத்திருப்பதையும், அவர்கள் நமது ஏற்றுமதியாளர்களின் வாய்ப்புகளை பறிக்கும் நிகழ்வுகளையும் வெளியுறவுத் துறை கொள்கைகளை முடிவு செய்யும்போது கவனத்தில் கொள்வது அவசியம். மருந்து பொருட்கள், மின்னணு சாதனங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் நிலை இருந்தாலும், ஒரு சில பொருட்கள் வரிவிதிப்பிலிருந்து தப்பியிருப்பதால் அத்துறைகளுக்கு பாதிப்பு ஏற்படப் போவதில்லை.
சில பொருட்களுக்கு உள்ளூர் சந்தையிலேயே அதிக தேவையிருப்பதால், அந்த துறையினர் வெளிநாட்டு ஏற்றுமதி குறைவால் பாதிக்கப்படப் போவதில்லை. உண்மையில் பாதிப்பு ஏற்படும் துறைகள்மீது அதிக கவனம் செலுத்தி உரிய மாற்றங்களை மத்திய அரசு செய்வதன் மூலம், ஏற்றுமதியாளர்களை பாதுகாப்பதுடன், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியையும் தக்க வைக்க முடியும்.