

சென்னப்பட்டணம், 1746 செப்டம்பர் 21ஆம் தேதி பிற்பகலில் பிரெஞ்சு நாட்டின் வசமானது. இரண்டு வருஷம், பதினொரு மாதம், பத்து நாள் பிரெஞ்சு ஆட்சி சென்னையில் நடைபெற்றது. இடைப்பட்ட நாட்களில் பிரெஞ்சு ஆட்சியாளர்கள் பட்டணத்தை எந்தளவுக்குச் சுரண்ட முடியுமோ அந்த அளவுக்குச் சுரண்டினர்.
புதுச்சேரியில் பிரெஞ்சு அரசாங்கத்தின் துபாஷியாக இருந்த ஆனந்தரங்கப்பிள்ளை இது குறித்துத் தனது நாட்குறிப்பில் விரிவாகவே பதிவுசெய்திருக்கிறார். ஆளுகிறவர்களுக்குப் பயந்து வீட்டிலே, அடுப்பங்கறையிலே, குளத்திலே மக்கள் தங்கள் உடைமைகளைப் புதைத்து வைத்தார்கள்.