

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார கூட்டங்களில் ஆம்புலன்ஸ் நுழைவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழக அரசியல் இதுவரை கண்டிராத புதிய வடிவம். வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட போது தான் எடப்படி பழனிச்சாமி இந்த விவகாரத்தை கிளப்பி வைத்தார்.
‘‘நான் பிரச்சாரம் செய்யும் இடங்களிலெல்லாம் வேண்டுமென்றே நோயாளி யாரும் இல்லாத ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளே நுழைந்து இடையூறு செய்கின்றன. இனி அப்படி நடந்தால், ஆம்புலன்ஸ் ஓட்டுநரையே நோயாளியாக்கி அனுப்புவோம்’’ என்று எச்சரித்தார். அவரது பேச்சு தொண்டர்களை உணர்ச்சிவயப்பட வைத்துவன்முறையில் ஈடுபடுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அதை நிரூபிக்கும் வகையில் திருச்சி துறையூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரை அதிமுக தொண்டர்கள் தாக்க முயற்சித்துள்ள சம்பவமும் நடந்திருக்கிறது. துறையூரில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் நுழைந்ததும், அதிமுகவினர் அந்த வாகனத்தின் மீது கையால் அடித்தும், குத்தியும் அச்சுறுத்தியுள்ளனர்.
அந்த வாகனத்தில் 5 மாத கர்ப்பிணியான ஹேமலதா என்ற மருத்துவ உதவியாளரும் இருந்துள்ளார். அங்கிருந்த காவலர்கள் சமயோசிதமாக செயல்பட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை அதிமுக தொண்டர்களின் பிடியில் இருந்து விடுவித்து வந்த வழியே திருப்பி அனுப்பி வைத்ததன் மூலம் அசம்பாவிதத்தை தடுத்துள்ளனர்.
அதிமுக பிரச்சார கூட்டத்திற்கு இடையூறு செய்வதற்காகவே ஆளுங்கட்சியால் ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படுகிறது என்று அதிமுக-வினர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், மருத்துவ உதவி கோரி அழைப்பு வரும்போது, மருத்துவப் பணியாளர்களுடன் நோயாளி இல்லாமல் தான் ஆம்புலன்ஸ் செல்லும் என்பது நிதர்சனம்.
பிரச்சாரக் கூட்டம் நடத்துவது பிரதான எதிர்க்கட்சியாகவும், அதிகாரத்தை கையில் வைத்திருப்பது ஆளும் திமுக-வாகவும் இருப்பதால், இந்தப் பிரச்சினை எளிதாக அரசியலாகி விடுகிறது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் காவல்துறையினர் சற்று கூடுதல் எச்சரிக்கையுடன் பணியாற்றி, உண்மையாகவே நோயாளிக்காக ஆம்புலன்ஸ் வந்தால் அதற்கான மாற்று வழியை உருவாக்கி கொடுத்து வன்முறை சம்பவங்கள் நடக்காமல் காப்பது அவசியம். ஆம்புலன்ஸ் ஓட்டுநரைதாக்கினால் 10 ஆண்டுகள் சிறை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது மட்டும் போதாது.
அரசியல்ரீதியாக நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களின்போது ஆம்புலன்ஸ் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால், காவல்துறைக்கும் உடனே தகவல் அளித்து கூட்டத்தை தவிர்த்து மாற்றுவழிகளை ஏற்பாடு செய்வதன்மூலம் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளை தவிர்க்க முடியும். அதேசமயம், எடப்பாடி பழனிச்சாமி போன்ற பொறுப்புள்ள தலைவர்கள் தொண்டர்களை உணர்ச்சிவசப்பட வைத்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும்.
அத்தகைய பேச்சு உண்மையாகவே நோயாளியை அழைத்துவர ஆம்புலன்ஸ் வரும்போதும், அதன்மீது தாக்குதல் நடத்துவதற்கும் வழிவகுத்து விடும். இந்த விஷயத்தில் ஆளுங்கட்சி, காவல்துறை,எதிர்க்கட்சி தலைவர்கள் என மூன்று தரப்பும் பொறுப்புடன் செயல்பட்டால் மட்டுமே தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.