

தமிழில் மறுவாசிப்பு, நவீனத்துவ எழுத்துமுறை, கோட்பாட்டு ஆய்வு என்கிற வகைமைகளில் தவிர்க்க முடியாத ஆளுமை பேராசிரியர் ராஜ் கெளதமன். ஆய்வு, மொழிபெயர்ப்பு, கவிதை, புனைகதை என்று பல வடிவங்களிலும் எழுதியவர். 1980களின் இறுதியில் சிற்றிதழ்களினூடாகக் கோட்பாட்டு விவாதங்கள் மேலெழுந்தபோது அதில் பங்கெடுத்த அவர், பின்னாளில் இலக்கியம், அரசியல், பண்பாட்டு ஆய்வுகளில் புதிய நோக்குகளைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கான திறப்புகளை வழங்கியவர்களுள் ஒருவராக அமைந்தார். தமிழ் இலக்கிய ஆய்வுச் சூழலிலும் படைப்புச் சூழலிலும் அடர்த்தியான தாக்கத்தைச் செலுத்திய ராஜ் கெளதமனின் ஆய்வுப் பங்களிப்புகள், இலக்கியத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட பண்பாட்டு வரலாறுகள் மீது வைத்த பார்வை மாறுபட்டதாக இருந்தது.
அந்தப் பார்வையால் சமூகத்தில் விளைந்தது என்ன என்கிற கேள்வி முக்கியமானது. கோட்பாடுகளும் தமிழியல் ஆய்வுகளும்: கடந்த நூற்றாண்டின் கடைசி இருபதாண்டுகளில் தமிழ் இலக்கிய, பண்பாட்டு ஆய்வாளர்கள் ஏராளமான ஐரோப்பியக் கோட்பாடுகளைத் தங்களது ஆய்வுக்குப் பயன்படுத்திக்கொண்டாலும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒவ்வொருவரும் தத்தமக்கெனச் சில கோட்பாடுகளைத் தேர்ந்துகொண்டனர்.