

இந்தியாவின் மொழிக் கொள்கை என்பது, நாடு விடுதலை அடைவதற்கு முன்பு இருந்ததைவிடத் தற்போது அதிகச் சிக்கல் நிறைந்த ஒன்றாக அமைந்துள்ளது. பிற நாடுகள் தங்களுக்கென ஒரு பொது மொழியைக் கொண்டிருக்கும்போது, இந்தியா ஏன் தனக்கென ஒரு பொது மொழியை வைத்துக்கொள்ளக் கூடாது என்று பெரும்பாலான வட இந்திய மக்களும் மத்திய அரசில் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் வாதிடுகின்றனர். மேலோட்டமாகப் பார்க்கையில், இது இயல்பான உணர்ச்சியாகத் தோன்றினாலும், ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையில் எழுந்த ஒன்றாக இல்லை.
மொழிகளின் முக்கியத்துவம்: ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஸ்பெயின், சீனா போன்ற நாடு அல்ல இந்தியா. இந்நாடு ஐரோப்பியக் கண்டத்தைப் போன்றது. ஏறக்குறைய 8 கோடி மக்கள்தொகை கொண்ட ஐரோப்பிய நாடுகளில் 287 மொழிகள் பேசப்பட்டாலும் அதில் ஆங்கிலம், ஜெர்மனி, இத்தாலி உட்பட 24 மொழிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவல் மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு ஒரு பொது மொழி கிடையாது. கிரேக்கம், ரஷ்யா நீங்கலாக எல்லா மொழிகளுக்கும் அங்கு பொது எழுத்து வடிவம் இருந்தபோதிலும், ஒரு பொது மொழியை ஏற்படுத்த முயன்று அது தோல்வியைத் தழுவியது என்பது வரலாறு.